சீன முயற்சியில் சவுதி, ஈரான் மீண்டும் உறவு

சீன முயற்சியில் சவுதி, ஈரான் மீண்டும் உறவு

சீனாவின் முயற்சியில் சவுதி அரேபியாவும், ஈரானும் மீண்டும் தம்முள் உறவை புதுப்பிக்கின்றன. அதன் ஒரு படியாக சவுதியும், ஈரானும் 6 ஆண்டுகளுக்கு பின் தமது தூதரகங்களை மீண்டும் ஆரம்பிக்க உள்ளன. இந்த திடீர் உறவால் அமெரிக்கா திகைப்படைந்து உள்ளது.

இதுவரை காலமும் அமெரிக்கா ஈரானை ஒரு பயங்கர நாடாக காட்டி, அந்த ஆபத்துக்கு மருந்து ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்காவின் ஆதரவுடன் இருப்பதே என்ற மாயையையும் வளர்த்து இருந்தது. அந்த மாயையை சீனா உடைத்தமை  அமெரிக்காவின் ஆளுமையை மத்திய கிழக்கில் வீழ்ச்சியுற செய்துள்ளது.

ஆனாலும் அமெரிக்க பேச்சாளர் John Kirby இந்த விசயத்தில் சீனாவின் பங்கை குறைத்து மதிப்பிட்டு உள்ளார். பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவே ஈரான் இணக்கத்துக்கு வந்துள்ளதாக Kirby கூறியுள்ளார்.

இந்த புதிய சவுதி-ஈரான் உறவால் யெமென் (Yemen) நாட்டில் 2014 முதல் நிலவும் வெளியார் தோற்றுவித்த யுத்தமும் நிறுத்தப்பட சந்தர்ப்பம் உண்டு. யெமென் யுத்தத்தில் ஒரு பகுதிக்கு சவுதியும், அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளும் உதவ, மற்ற பகுதிக்கு ஈரான் உதவி வந்தது.

முன்னாள் அமெரிக்காவின் ஐ.நாவுக்கான அதிகாரி Jeffrey Feltman இது பைடென் அரசின் முகத்தில் அறைந்தது போல் (as a slap at the Biden administration) உள்ளது என்றுள்ளார்.

நேற்று வெள்ளி கையொப்பமிடப்பட்ட இந்த சமாதான முயற்சியில் சீனாவின் வெளியுறவு அமைச்சர் Wang Yi முழுமையாக ஈடுபட்டு இருந்தார்.