டெல்கியில் உழவர் போராட்டம்

கடந்த ஒரு கிழமையாக தமது இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்த இந்திய உழவர் தற்போது தலைநகர் டெல்கிக்கு நகர்ந்து உள்ளனர். பல்லாயிரம் உழவர்கள் டெல்கியில் பல வீதிகளை மறித்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் இந்திய மத்திய அரசு நடைமுறை செய்த 3 புதிய சட்டங்களை எதிர்த்தே இவர்கள் போராடுகின்றனர்.

நீண்ட காலமாக அரசு இந்திய உழவருக்கும், அறுவடைகளை கொள்வனவு பெரும் நிறுவனங்களுக்கும் இடையில் நடுவராக இருந்து விலையை நிர்ணயித்து வந்துள்ளது. ஆனால் புதிய சட்டம் கொல்வனவு நிறுவனங்கள் நேரடியாக அறுவடைகளை உழவரிடம் இருந்து கொள்வனவு செய்ய உரிமை வழங்குகிறது. அதை உழவர் விரும்பவில்லை.

இந்தியாவில் பெரும்பாலான உழவர் சுமார் 1 முதல் 2 ஏக்கர் நிலத்தை கொண்டுள்ள சிறிய அளவிலான உழவரே. அவர்கள் சர்வதேச அளவில் பலம் கொண்ட கொள்வனவு நிறுவனங்களுடன் போட்டியிட்டு தமது அறுவடைகளுக்கு நியாய விலையை பெற முடியாது என்கின்றனர்.

டெல்கி வந்த உழவருள் பெரும்பாலானோர் புஞ்சாப் மாநிலத்தினர். உழவரின் வாக்குகளை இழக்க விரும்பாத பா.ஜ. கட்சியின் புஞ்சாப் மாநில கூட்டணி கட்சியான Akali Dal உறவை முறித்துள்ளது. மாநில பா.ஜ. கட்சியும் இடரில் உள்ளது. ஹரியானா உழவரும் பெருமளவில் டெல்கி வந்துள்ளனர்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சீக்கியர் சிலர் அமெரிக்காவின் San Francisco நகரில் உள்ள இந்திய முகவர் நிலையம் அருகேயும் ஊர்வலம் ஒன்றை புதன்கிழமை செய்துள்ளனர்.