தீவுப்பகுதியில் சீன மின் உற்பத்தி, இந்தியா விசனம்

தீவுப்பகுதியில் சீன மின் உற்பத்தி, இந்தியா விசனம்

இலங்கையின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய தீவுகளில் சீனா சூரிய மற்றும் காற்றாடி மூலமான மின்னை உற்பத்தி செய்யவுள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளது இந்தியா. ஏற்கனவே இந்திய-ஜப்பானிய கூட்டுக்கு வழங்கி இருந்த கொழும்பில் கட்டப்படவிருந்த கிழக்கு கொள்கலன் துறை (ECT, East Container Terminal) உரிமையை இலங்கை பறித்து இருந்தமையும் இந்தியாவுக்கு விசனத்தை உருவாக்கி இருந்தது. இந்நிலையில் சீனா இந்தியாவை அண்டிய தீவுப்பகுதியில் செயற்படுவது விசனத்தை மேலும் உக்கிரம் செய்துள்ளது.

சீனாவின் Sinosar-Etechwin என்ற கூட்டு நிறுவனமே தீவுப்பகுதிகளில் சூரிய மின்னையும், காற்றாடிகள் மூலமான மின்னையும் உற்பத்தி செய்ய உள்ளன. இந்த திட்டத்தில் இலங்கை தரப்பில் Ceylon Electricity Board அங்கமாக இருக்கும். இதற்கு $12 மில்லியன் பணம் முதலிடப்படவுள்ளது. அப்பணம் Asian Development Bank கில் இருந்து பெறப்படும்.

இந்தியாவின் விசனத்தை தணிக்க தற்போது கொழும்பு WCT (West Container Terminal) திட்டத்தின் 85% உரிமையை, 35 ஆண்டு காலத்துக்கு, இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் வழங்க உள்ளதாக இலங்கை தெரிவித்து உள்ளது. அந்த அழைப்புக்கு இந்தியா இதுவரை கருத்து கூறவில்லை. ECT திட்டத்தை வழங்கி, பின் பறித்ததுபோல் WCT திட்டத்துக்கும் நடக்கலாம் என்று இந்தியா அஞ்சக்கூடும்.

ஜப்பானுக்கு வழங்கியிருந்த கொழும்பு light rail திட்டமும் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஜப்பானும் விசனம் கொண்டுள்ளது.