தேர்தல் வெற்றிக்கு சீனாவின் உதவியை நாடினார் ரம்ப்?

JohnBolton

இந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள தனது இரண்டாவது சனாதிபதி ஆட்சிக்கான தேர்தல் வெற்றிக்கு சீன சனாதிபதி சீயின் உதவியை நாடினார் ரம்ப் என்கிறார் ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு செயலாளர். ஜான் பால்டன் (John Bolton) என்ற ரம்பின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் விரைவில் வெளிவரவுள்ள அவரது In The Room Where It Happened என்ற புத்தகத்திலேயே அவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.
.
பால்டனின் புத்தகத்தால் கோபம் கொண்ட ரம்ப் அந்த புத்தகத்தை தடை செய்ய நீதிமன்றம் செல்கிறார். பால்டன் ஒரு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்றும், அவர் பல அரச இரகசியங்களை அறிந்துள்ளார் என்றும், அந்த இரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார் ரம்ப்.
.
பால்டன் தனது புத்தகத்தில் ரம்ப் சீனாவிடம் தனது வெற்றிக்காக இரந்தார் என்று கூறியுள்ளார். சீனா அமெரிக்காவிடம் இருந்து சோயா, கோதுமை போன்ற விவசாய பொருட்களை அதிக அளவில் கொள்வனவு செய்வது தனது வெற்றிக்கு முக்கியம் என்று ரம்ப்  சீனாவுக்கு கூறி உள்ளார் என்கிறது மேற்படி புத்தகம்.
.
நீதிமன்றம் தடை செய்யாவிடின், மேற்படி புத்தகம் ஜூன் மாதம் 23 ஆம் திகதி வெளிவரவுள்ளது. நவம்பர் மதம் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலுக்கு முன் இப்புத்தம் வெளிவருவதை ரம்ப் விரும்பவில்லை.
.
பால்டன் ரம்பின் 3 ஆவது பாதுகாப்பு செயலாளராக 16 மாதங்கள் கடமை ஆற்றியவர்.
.