பங்குசந்தையில் Facebook இன்று $252 பில்லியனை இழந்தது

பங்குசந்தையில் Facebook இன்று $252 பில்லியனை இழந்தது

Facebook நிறுவனத்தின் தாய் நிறுவனமான Meta வின் பங்கு சந்தை பெறுமதி இன்று $252 பில்லியனை இழந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி நலிவடைந்து செல்வதே காரணம். வேகமாக வளரும் Tik Tok நிறுவனம் Facebook வர்த்தகத்தை வேகமாக பறித்து வருகிறது.

Facebook (அல்லது Meta) பங்கு ஒன்றின் விலை இன்று $85.24 ஆல் வீழ்ச்சி அடைந்து உள்ளது. அது 26.39% வீழ்ச்சி. பெரிய நிறுவனங்களின் இவ்வகை வீழ்ச்சியை ஒப்பிடுகையில் இதுவே மிக பெரிய வீழ்ச்சி.

Facebook வர்த்தகம் தொடர்ந்தும் வீழ்ச்சி அடையலாம் என்று முதலீடு செய்வோர் கருதுகின்றனர். வழமையாக சுமார் 20 மில்லியன் Facebook பங்குகளே ஒரு நாளில் கைமாறும். ஆனால் இன்று 184 மில்லியன் பங்குகள் கைமாறி உள்ளன.

இதற்கு முன் செப்டம்பர் மாதம் 3ம் திகதி, 2020ம் ஆண்டு Apple $180 பில்லியனை இழந்து இருந்தது. 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதி Microsoft $178 பில்லியனை இழந்து இருந்தது.

Facebook இவ்வாறு பெரும் தொகையை பங்கு சந்தையில் இழப்பது இது முதல்தடவை அல்ல. 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் திகதியும் Facebook $121 பில்லியனை பங்கு சந்தையில் இழந்து இருந்தது.