பிரித்தானியரை இந்தியாவுக்கு பிரித்தானியா காட்டிக்கொடுத்தது

பிரித்தானியரை இந்தியாவுக்கு பிரித்தானியா காட்டிக்கொடுத்தது

Jagtar Singh Johal என்ற பிரித்தானிய சீக்கியரை இந்தியாவுக்கு பிரித்தானியா காட்டிக்கொடுத்து உள்ளது. அதனால் Johal இந்தியாவில் துன்புறுத்தப்பட்டு (torture) உள்ளார். காட்டிக்கொடுத்தது மட்டுமன்றி பின் அந்த சீக்கியரின் நலனுக்காக பிரித்தானியா அக்கறை கொண்டுள்ளதாகவும் நடித்து உள்ளது.

இந்தியாவில் வாழும் சீக்கியரின் உரிமைகளுக்காக ஆக்கங்கள் எழுதிவரும் Johal 2017ம் ஆண்டு இந்தியா சென்ற பொழுதே இந்தியாவில் அடையாளம் காணப்படாதோரால் கடத்தப்பட்டு பின் இந்த ஆண்டு மே மாதம் சட்டப்படி கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் தற்போது டெல்லி சிறையில் உள்ளார்.

Reprieve என்ற மனித உரிமைகள் அமைப்பே Johal என்ற சீக்கியரை இந்தியாவுக்கு காட்டிக்கொடுத்தது பிரித்தானியா என்ற உண்மையை அறிந்து பகிரங்கப்படுத்தி உள்ளது. தற்போது இது தொடர்பாக பிரித்தானியா கருத்து கூற மறுக்கிறது.

பிரித்தானியாவின் MI 5 தனது தரவை MI 6 அமைப்புக்கு வழங்க, MI  6 அதை இந்தியாவுக்கு வழங்கி உள்ளது என்கிறது Reprieve.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா சென்ற பிரதமர் Boris Johnson இந்தியாவின் கையில் இருக்கும் சீக்கியரை விடுதலை செய்ய கேட்டிருந்தார். ஆனால் பிரித்தானியாவே Johal லை காட்டிக்கொடுத்தது என்ற உண்மை அதற்கு பின்னரே வெளிவந்திருந்தது.

பிரித்தானியாவின் Dumbarton (Scotland) நகரத்தவரான Johal ஆகஸ்ட் 12ம் திகதி பிரித்தானிய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.