புதிய அமெரிக்க வரிகளுக்கு சீனா எச்சரிக்கை

US_China

இன்று ஞாயிற்றுக்கிழமையும் நேற்று சனிக்கிழமையும் சீனாவில் அமெரிக்காவின் Commerce Secretary Wilbur Ross, சீனாவின் வர்த்தகத்துக்கு பொறுப்பான உதவி முதல்வர் Liu He ஆகியோர் நடாத்திய பேச்சுக்கள் தீர்வு எதுவும் இன்றி முடிந்துள்ளது. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால் இணைந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
.
பதிலாக சீனா அமெரிக்கா இந்த மாத நடுப்பகுதியில் நடைமுறை செய்ய முன்வந்துள்ள புதிய இறக்குமதி வரிகள் (tariffs) தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அமெரிக்கா தன்னிசையாக புதிய வரிகள் எதையும் நடைமுறை செய்தால், சீனா அமெரிக்காவுடனான அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களையும் கைவிடும் என்று கூறியுள்ளது. இந்த எச்சரிக்கைக்கான அமெரிக்காவின் பதில் இதுவரை வெளியிடப்படவில்லை.
.
2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் சீனா $375 பில்லியன் பெறுமதியான இறக்குமதிக்கும் மேலதிகமான ஏற்றுமதியை (surplus) கொண்டிருந்தது. ரம்ப் அரசு அந்த தொகையை $200 பில்லியனால் குறைக்க முனைகிறது. அதற்கு இணங்க மறுத்த சீனா பதிலுக்கு தாம் அதிகரித்த அளவில் அமெரிக்காவின் விவசாய மற்றும் எரிபொருள்களை கொள்வனவு செய்ய மட்டுமே இணங்கி உள்ளது.
.
சீனாவுடன் மட்டுமன்றி ரம்ப் அரசு பல முனைகளில் வர்த்தக யுத்தத்தில் இறங்கி உள்ளது. ஐரோப்பிய நாடுகள், கனடா, மெக்ஸிகோ, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் அவற்றுள் சில.
.