பெலோஷியின் தாய்வான் பயணத்தால் மேலுமொரு யுத்தம்?

பெலோஷியின் தாய்வான் பயணத்தால் மேலுமொரு யுத்தம்?

அமெரிக்காவின் House Speaker நான்சி பெலோஷி (Nancy Pelosi) தாய்வான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் அங்கு பயணம் ஒன்றை மேற்கொள்ள முனைவது சீனாவுக்கும், தாய்வானுக்கும் இடையே நேரடி மோதலை தோற்றுவிக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவ்வாறு மோதல் ஆரம்பித்தால் அமெரிக்காவும் அதில் தலையிட நேரிடும்.

இந்த விசயம் உட்பட பல காரணங்களால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி உள்ளது. இந்த முறுகல் நிலையை தணிக்க அமெரிக்க சனாதிபதி பைடென் நியூ யார்க் நேரப்படி இன்று வியாழன் காலை 8:33 மணிக்கு சீன சனாதிபதியுடன் இணையம் மூலம் உரையாடி இருந்தார். சுமார் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடம் நீடித்த இந்த உரையாடல் அவர்கள் இடையே உள்ள முறுகல் நிலையை தணிக்கவில்லை.

அமெரிக்கா தாய்வான் சீனாவின் அங்கம் என்று கூறும் One China கொள்கையை சட்டப்படி கொண்டிருந்தாலும், அமெரிக்க அரசியவாதிகள் அவ்வப்போது தாய்வான் ஒரு சுதந்திர நாடு என்று கூறுவதுண்டு. நான்சி பெலோஷயியும் அவ்வாறு கருத்து கூறியுள்ளார்.

சீனாவின் 4ஆவது உயர் அதிகாரியான Wang Yang இன்று வியாழன் தனது கூற்று ஒன்றில் எந்தவொரு தனிநபரோ அல்லது படையோ சீனாவை குறைத்து எடைபோட வேண்டாம் என்றும் தாம் தமது நாட்டை பாதுகாக்க எதையும் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

பொதுவாக House Speaker பெலோஷி அமெரிக்க இராணுவ விமானத்திலேயே செல்வதால், இதை சீனா ஆக்கிரமிப்பாக கணிக்க இடமுண்டு. அவ்வகை விமானத்தை பின் தொடர்ந்து escort செய்வதன் மூலம் சீனா படைகள் தாய்வானுள் நுழைய முனையலாம். பெலோஷியின் பாதுகாப்பு கருதி தாய்வான் அத்திசையில் சுட முடியாது போகலாம்.

இந்த முரண்பாடு காரணமாக சீனாவும், அமெரிக்காவும் தாய்வான் பகுதிக்கு தமது படைகளை மெல்ல நகர்த்துகின்றன. அமெரிக்காவின் USS Ronald Reagon என்ற விமானம் தாங்கி கப்பல் திங்கட்கிழமை சிங்கப்பூரில் இருந்து தென் சீன கடல் நோக்கி பயணிக்கிறது.

இதற்கு முன், 1997ம் ஆண்டு, அக்கால அமெரிக்க House Speaker Newt Gingrich தாய்வான் சென்று இருந்தார். ஆனால் தற்போதைய சீனா 1997ம் ஆண்டு சீனா அல்ல.