மக்கள் வீதிகளில் மரணிக்க, அமர்நாத் யாத்திரை?

மக்கள் வீதிகளில் மரணிக்க, அமர்நாத் யாத்திரை?

இந்திய வைத்தியசாலைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி, புதிதாக வரும் நோயாளிகள் கட்டில் இன்றி வைத்தியசாலைகளின் முன் வீதிகளில் மரணிக்க, இந்தியா அமர்நாத் (Amarnath Cave Temple) என்ற அடுத்த இந்து யாத்திரைக்கு தயாராகுகிறது. ஏப்ரல் மாதத்தில் திடீரென கரோனா தெற்று இந்தியாவில் அதிகரிக்க கும்பமேளா யாத்திரையும், அங்கு அண்மையில் இடம்பெற்ற தேர்தல் ஊர்வலங்களும் பிரதான காரணங்களாக இருந்தன. தற்போது அமர்நாத் யாத்திரையும் அதில் இணைய உள்ளது.

இணையம் மூலம் அமர்நாத் யாத்திரைக்கு பதிவு செய்யும் திட்டம் இருந்திருந்தாலும் அது நிறுத்தப்பட்டு உள்ளது. அனால் யாத்திரை நிறுத்தப்படவில்லை.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரில், கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் (12,730 அடி) உள்ளது இந்த சிவனின் குகைக்கோயில். இங்கு சுமார் 600,000 பக்தர்கள் செல்வதுண்டு. இந்த நிகழ்வு 56 தினங்கள் இடம்பெறும். இந்த ஆண்டின் நிகழ்வுகள் ஜூன் 28ம் திகதி முதல் ஆகஸ்ட் 22ம் திகதி வரை இடம்பெறும்.

இந்த 40 மீட்டர் உயர குகைக்குள் ஒரு stalagmite படிவம் உள்ளது. குகைகளுள் நீருடன் வடியும் கல்சியம் உப்பு ஒன்றின் மேல் ஒன்று படிந்து உயரும். இதையே சிவலிங்கமாக கருதப்படுகிறது. கோடைகாலம் தவிர்ந்த காலத்தில் இப்பகுதியில் snow நிரம்பி இருக்கும்.

உள்ளூர் அரசு Chandanwari, Baltal என்ற இரண்டு முகாம்களை நடந்து யாத்திரை செய்வோரின் வசதிக்காக அமைக்கவுள்ளது. குகை கோவில் Chandanwari முகாமில் இருந்து 32 km தூரத்திலும், Baltal முகாமில் இருந்து 14 km தூரத்திலும் உள்ளது.

டெல்லி, மும்பாய் போன்ற இடங்கள் போல் காஷ்மீரில் வைத்திய வசதிகள் இல்லை. அங்குள்ள 2,599 வைத்தியசாலை படுகைகளில், 1,220 ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன.

Haridwar நகரில் இடம்பெற்ற கும்பமேளா நிகழ்வில் பக்தர்களுக்கு மட்டுமன்றி 9 உயர் குருக்களுக்கும் கரோனா தொற்றி இருந்தது.