மலேசியாவின் MM2H திட்டம் இடைநிறுத்தம், சீனர் தவிப்பு

மலேசியாவின் MM2H திட்டம் இடைநிறுத்தம், சீனர் தவிப்பு

வெளிநாட்டினரின் முதலீடுகளை பெறும் நோக்கில் 2002 ஆம் ஆண்டு மலேசியா Malasiya My Second Home (MM2H) என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது. அத்திட்டப்படி வெளிநாடுகளின் செல்வந்தர் மலேசியாவில் சொத்துக்களை கொள்வனவு செய்தால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரையான நீண்டகால விசா வழங்கப்படும்.

2002 ஆம் ஆண்டு முதல் 2018 வரையான காலத்தில் 131 நாடுகளில் இருந்து 43,943 பேர் இந்த MM2H திட்டத்தில் பங்குகொண்டிருந்தனர். அவர்களில் 30% மானோர் சீனர்கள். இவர்கள் சிங்கப்பூரை அண்டிய Johor என்ற மலேசிய மாநிலத்தில் புதிய வீடுகளை கொள்வனவு செய்திருந்தனர்.

ஆனால் கரோனா காரணமாகவும், அரசியல் மாற்றங்கள் காரணமாகவும் MM2H திட்டம் ஜூலை 2ஆம் திகதி முதல் மலேசிய அரசால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது.

மலேசிய அரசின் இடைநிறுத்த நடவடிக்கையால் பயம் கொண்ட வெளிநாட்டினர் தமது மலேசிய வீடுகளை விற்பனை செய்ய ஆரம்பித்து உள்ளனர். பலர் வீடுகளை விற்க முனைய, திடீரென கேள்வி பாரிய வீழ்ச்சியை அடைந்ததால், வீடுகளின் விலையும் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது.

கரோனா காரணமாக தற்போது மலேசியா செல்ல முடியாத சீனர் WeChat (social media) மூலமும் தமது வீடுகளை விற்க முனைகின்றனர். ஒரு சீனர் தனது 517 சதுர-அடி வீட்டை 600,000 சீன நாணயத்துக்கு (சுமார் $88,640) விற்பனை செய்ய முயல்கிறார். அனால் அதே அளவு வீடுகள் 2016 ஆம் ஆண்டில் 1,000,000 சீன நாணயத்துக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதனால் அவர் சுமார் 40% முதலீட்டை இழக்க முன்வந்தும் வீட்டை விற்க முடியாது தவிக்கிறார்.