யாருக்கு சொல்லியழ 11: போடு புள்ளடி நினைவு தினத்துக்கு

யாருக்கு சொல்லியழ 11: போடு புள்ளடி நினைவு தினத்துக்கு

இந்த ஆண்டுக்கான முள்ளிவாய்க்கால் நினைவு தினத்துக்கு கனடிய அரசியல்வாதிகள் பலரும் கட்சி பேதமின்றி முண்டியடித்து மூக்கால் அழுதுள்ளனர். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் எரிந்தபோது, புலித்தமிழர்கள் புலிக்கொடியோடு Gardiner Expressway என்ற Toronto நகரின் பெரும் தெருவை மறிந்தபோது, Ottawa பாராளுமன்றத்தை நிரப்பியபோது அழாதவர்களே, அப்போது உரியன செய்யாதவர்களே, முள்ளிவாய்க்காலுக்கு பின் பிறந்த பிள்ளை பள்ளிக்கூடம் போகும் இக்காலத்தில் மூக்கால் அழுகிறார்கள். அப்படியானால் அடுத்துவரும் ஆண்டுகளில் இவர்கள் குலுங்கி குலுக்கி அழுவார்களோ? அதற்கு பின்னான காலத்தில் ஒப்பாரி வைத்து அழுவார்களோ?

மேற்கு நாடுகளின் அரசியல்வாதிகளும் மெல்ல மூன்றாம் உலக நாடுகளின் அரசியல்வாதிகளுக்கான குணங்களை கொள்ள ஆரம்பித்து உள்ளனர். அவர்களும் நாளுக்கொரு சொல், இடத்துக்கொரு சொல்லாக நடிக்க ஆரம்பித்து உள்ளனர். கனடாவில் இலங்கை தமிழருக்காக அழும் அரசியல்வாதிகளின் நோக்கம் தமிழர்களின் வாக்குகளை பெறுவது மட்டுமே. கனடாவில் இலங்கை தமிழர் நிறைந்து பகுதிகளின் அரசியல்வாதிகள் மட்டுமே மூக்கால் அழுதுள்ளனர்.

அதிலும் கனடிய பிரதமர் Trudeau புத்திசாலித்தனமாக தமிழர்களின் காதில் பூ வைத்து அழுதுள்ளார். அவரின் அறிக்கையில் Genocide என்ற சொல் இல்லை. இச்சொல் தற்செயலாக தவறிய ஒன்றல்ல. அமிர்தலிங்கம் தமிழில் ‘தமிழர் விடுதலை கூட்டணி” என்றும் ஆங்கிலத்தில் Tamil United Liberation Front என்றும் கூறி காதிலை பூ வைத்த அதே தமிழருக்குத்தான் பிரதமரும் காதிலை பூ வைத்துள்ளார். அண்மையில் ஐ.நா. வெளியிட்ட இலங்கைக்கு எதிரான அறிக்கையும் இவ்வாறே பலமுறை ‘water down’ செய்யப்பட்டது.

1994ம் ஆண்டு றவாண்டா (Rwanda) என்ற ஆபிரிக்க நாட்டில் genocide நிகழ்ந்த காலத்தில் அதை ‘genocide’ என்று அழைக்க அமெரிக்காவின் ஐ.நா. தூதுவர் Madeline Albright மறுத்து இருந்தார். ஆனால் எல்லாம் முடிந்த பின்னரே அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் அதை genocide என்று கூறின.

Toronto வாழ் இலங்கை தமிழரின் வாக்குகளுக்காக முற்காலங்களில் அழுத Scarborough பகுதி பாராளுமன்ற கரி (தமிழ் கரி அல்ல, கிரேக்கத்து கரி) இப்போது அழுவதில்லை. இவர் வன்னி களம் சென்று வந்த செம்மல் ஒன்று. Trudeauவுக்கு முன் அழுத இவருக்கு எங்கள் ரத்தத்தின் ரத்தங்கள் கை கீறி இரத்தப்பொட்டு வையாத குறை. ஆனால் தமிழ் கரிகள் தாமே பாராளுமன்றம் செல்ல, கிரேக்க கரிக்கு அழுகை வருவது தற்போது நின்றுவிட்டது.

மேற்கு நாடுகளின் அரசியல்வாதிகளின் genocide மீதான வெறுப்பு நகைப்புக்குரியது. பலஸ்தீனர் அழியும்போது “Israel has the right to defend” என்பவர்கள் கனடாவில் பெரும்தொகை சிங்களவர் இருந்திருந்தால் “Sri Lanka has the right to defend” என்றுதான் கூறியிருப்பார்.

Michigan மாநிலத்துக்கு நேற்று படம் காட்ட சென்று இருந்தார் அமெரிக்க சனாதிபதி பைடென். அங்கு பத்திரிகையாளர் ஒருவர் Gaza வன்முறை தொடர்பாக கேள்வி ஒன்றை கேட்டபோது பைடென் pickup வாகனத்தில் எடுத்தாரே ஒரு ஓட்டம், அது கண்கொள்ளா காட்சி ஒன்று.

மற்ற இனத்தவர் ஒருபுறம் இருக்கட்டும், கனடாவில் கை நிரம்ப உள்ள தமிழ் கனடிய அரசியல்வாதி எவராவது பலஸ்தானில் இஸ்ரேல் செய்வது genocide என்பதை துணிந்து கூற முடியுமா? அவ்வாறு செய்ய உழைப்புக்கு வந்த அவர்கள் மூடர்கள் அல்ல. அவ்வாறு செய்தால் அடுத்த நாளே கட்சி வீட்டை அனுப்பிவிடும் என்று அவர்களுக்கு தெரியும். கண்ட நின்ற குழுக்களின் உரிமைக்காக Facebook எங்கும் அழுது தம் கட்சிக்கு ஆலாத்தி எடுக்கும் கனடிய தமிழ் அரசியல்வாதி எவரும் பலஸ்தீனருக்கு அழார்.

பலஸ்தீனர்களுக்கு அழாத மேற்கு நாட்டு அரசியல்வாதிகள் சீனா Xinjiang மக்கள் மீது genocide என்று அழுகிறார்கள். இதற்கு genocide மீதான அவர்களின் வெறுப்போ அல்லது Xinjiang மக்கள் மீதான பாசமோ காரணம் அல்ல. பதிலாக சீனா மீதான காழ்ப்பே காரணம்.

இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?