யாருக்கு சொல்லியழ 16: இங்கே ஆக்கிரமிக்கலாம் அங்கே முடியாது

யாருக்கு சொல்லியழ 16: இங்கே ஆக்கிரமிக்கலாம் அங்கே முடியாது

கனடாவின் Liberal, Conservative, NDP கட்சி பதவிகளில் குந்தி இருப்போரும், குந்தி இருக்க கனவு கொள்வோரும் கனடா ஒரு நேர்மை மிக்க நாடு, ஆக்கிரமிக்கப்படும் இலங்கை தமிழர் போன்ற மக்களுக்காக குரல் கொடுக்கும் நாடு என்றெல்லாம் புகழ் பாடுகின்றனர். உண்மையில் இந்த தமிழருக்காக கனடிய கட்சிகள் ஊளையிடுவது தமிழரின் வாக்குகளை பெற மட்டுமே.

தமிழரிலும் கேவலமாக ஆக்கிரமிக்கப்படும் பாலஸ்தீனர் சார்பில் கனடிய கட்சிகளோ, அந்த கட்சிகளில் தொங்கும், தொங்க முனையும் தமிழ் பாத்திரங்களே என்றைக்கும் பாலஸ்தீனர் சார்பில் குரல் கொடுப்பது இல்லை. இந்த சந்தர்ப்பவாத தமிழருக்கு தெரியும் தாம் அவ்வாறு செய்வது தமது கட்சி தலைமைக்கு இரத்த கொதிப்பை உருவாக்கி, தம்மை கழட்டி வீட்டுக்கு விரட்டி விடுவார்கள் என்று.

ஆனாலும் தாம் எல்லா ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஆணித்தரமானவர்கள் என்று காட்ட கனடிய பாராளுமன்றங்களில் மட்டும் “தாம் உலகம் எங்கும் நடக்கும் அடக்குமுறைகளுக்கு குரல் கொடுப்போம்” என்று காதிலை பூ சுத்துவார். கூடவே Facebook கிலும் பூ சுத்துவார்.

Ontario மாநில அரசின் குடிவகை நிறுவனமான LCBO (Liquor Control Board of Ontario) இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள West Bank பகுதியில் இருந்து யுத்தர்களால் தயாரித்து கனடாவரும் wine label களில் “Product of Israel” என்று பதிக்கும்படி கூறுகிறதாம். ஆனால் West Bank பாலஸ்தீனர் தயாரிக்கும் wine label களில் “West Bank” என்று மட்டும் பதிக்க நிர்பந்திக்கிறதாம்.

அங்கிருந்து வந்த சில போத்தல் label களில் Palestine என்று இருந்ததால் அதற்கு மேலே LCBO வெள்ளை label களை ஒட்டி உள்ளதாம்.

West Bank இஸ்ரேலின் மண் என்று கூறவும், அங்கு பலஸ்தீனருக்கு உரிமை கிடையாது என்றும் கூறவும் கனடாவுக்கு யார் உரிமை வழங்கியது. அது இருக்க சிங்களவன் தமிழரை ஆக்கிரமிரான் என்று அழும் கனடிய தமிழ் பாத்திரங்கள் பலஸ்தீனர் விசயத்தில் மௌனம் கொள்வதேன்? தோலகட்டி நெல்லி இரச போத்தலின் label மேலே இலங்கை அரசு “Product of Sri Lanka” label போட்டால் மட்டும் இந்த கனடிய தமிழ் அரசியல் பாத்திரங்கள் துள்ளி குதிப்பாரோ?

LCBO தாம் கனடாவின் CFIA (Canadian Food Inspection Agency) விதிகளுக்கு கட்டுப்பட்டே பலஸ்தீனத்தை விலக்கியதாக கூறியுள்ளது. CFIA கனடிய மத்திய அரசுக்கு உட்பட்டது. மற்றைய நாடுகளை திருத்த முனைய முன் கனடா தன்னை திருத்தி கொள்வது பண்பு.

இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?