யாருக்கு சொல்லியழ 20: அது அங்கே, இது இங்கே

யாருக்கு சொல்லியழ 20: அது அங்கே, இது இங்கே

உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனா மாதிரி உலகை ஆண்ட பிரித்தானியா தற்போது தன்னையே ஆழ முடியாது தவிக்கிறது. அந்த நாடு மட்டுமல்ல அங்குள்ள ஒரு கட்சியே தன்னை ஆழ முடியாத நிலை உருவாக இறுதியில் இந்திய வம்சம் வந்த Rishi Sunak பிரதமர் ஆகியுள்ளார் – பொது தேர்தல் மூலம் அல்ல, பதிலாக மேசைக்கு கீழான உட்கட்சி நாடகம் மூலம்.

Sunak பிரித்தானியாவில் இரண்டாம் சந்ததி. இவரின் பெற்றோர் ஆபிரிக்க நாடுகளில் இருந்து சென்ற இந்திய வம்சத்தினர்.

Sunak பிரித்தானிய பிரதமர் ஆனதை பாராட்டி இந்திய பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். மோதியின் வாழ்த்து வருமாறு:

“Warmest congratulations Rishi Sunak! As you become UK PM, I look forward to working closely together on global issues, and implementing Roadmap 2030. Special Diwali wishes to the ‘living bridge’ of UK Indians, as we transform our historic ties into modern partnership”

ஆங்கில நாடு ஒன்றுக்கு சென்ற 2ம் சந்ததி இந்தியர் ஒருவர் அந்த ஆங்கில நாட்டில் பிரதமர் ஆவதையிட்டு பெருமை கொள்ளும் பிரதமர் மோதி சுமார் 50 சந்ததிகளுக்கு முன் இந்தியா வந்த இஸ்லாமியர் இந்தியர் அல்ல என்று அடக்கி, ஒடுக்கி, விரட்ட முனைவதை பார்த்து அழுவதா, அல்லது சிரிப்பதா?

Sunak கின் செல்வந்த இந்திய மனைவி தற்போது இந்திய குடியுரிமையை கொண்டிருக்கும் நபர். ஆனால் சுமார் 50 சந்ததிகளுக்கு முன் வந்த இந்திய முஸ்லீம்களுக்கும் அவர்களின் அரபு அல்லது பாரசீக உறவுகளுக்கும் எந்தவித தொடர்பும் தற்போது இல்லை.

இந்திய வம்சம் வந்த பிரித்தானிய பிரதமர் பிரித்தானியாவில் தீபாவளி கொண்டாடலாம் என்றால் 50 சந்ததிக்கு முன் வந்த இந்திய இஸ்லாமியர் ரமடான் கொண்டாடுவதற்கு ஏன் எதிர்ப்பு?

இதற்கு எல்லாம் மகுடம் வைத்ததுபோல் பிரித்தானிய உறவை பிரதமர் மோதி “our historic ties” என்று விபரித்துள்ளார். பிரித்தானியா இந்தியர்களை அடிமை போல் அடக்கி ஆண்டது ‘historic ties’ ஆகுமா? மகாத்மா காந்தி அவ்வாறு கருதவில்லையே. பிரித்தானியா செய்ததையே ஆக்கிரமித்த Mughal போன்ற இஸ்லாமிய ஆட்சிகளும் செய்தன. அப்படியானால் இந்தியாவை ஆக்கிரமித்த இஸ்லாமியர்களும் இந்தியாவின் ‘historic ties’ தானே.

இதையெல்லாம் யாருக்கு சொல்லியழ?