அமெரிக்க சனாதிபதி ரம்ப் இந்தியா மீது தொடுத்த பலமுனை வர்த்தக, பொருளாதார தாக்குதல்களால் இந்தியாவின் பொருளாதாரம் சரியும் என்று கணித்த மோதி அரசு பெரும் வரி குறைப்புகளை இன்று திங்கள் அறிவித்துள்ளது.
இந்திய பொருட்கள் மீது ரம்ப் திணித்த 50% இறக்குமதி வரி, தற்போது அறிவிக்கப்படுள்ள H-1B விசாவுக்கான $100,000 கட்டணம் எல்லாமே இந்தியாவை பெரிதும் பாதிக்கும்.
இன்று இந்தியாவில் பால், பாண், மருந்து வகைகள் ஆகியனவற்றுக்கு வரி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
சிறிய கார், தொலைக்காட்சிகள், குளிரூட்டிகள் போன்றவற்றுக்கு வரி 28% இலிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய், சவர்க்காரம், ஷாம்பூ, ஆகியவற்றின் வரி 18% இலிருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
GST மூலம் அரசுக்கு பெரும் வருமானத்தை பெற விரும்பிய மோதி அரசு தற்போது மேற்படி வரி குறைப்புகளால் பெருமளவு வருமானத்தை இழக்க உள்ளது.
ஏற்கனவே பெப்ரவரி மாதம் மோதி அரசு $12 பில்லியன் வருமான வரியை மீண்டும் மக்களுக்கு வழங்க அறிவித்து இருந்தது. இன்று அறிவித்த வரி குறைப்பு மேலும் $5.4 பில்லியன் வருமானத்தை குறைக்கும் என்று கணிக்கப்படுகிறது.
ரம்பின் முதலாம் ஆட்சியில் மிளிர்ந்த ரம்ப்-மோதி நெருக்கம் தற்போது இருந்த இடம் தெரியாது மறைந்துள்ளது.