2024 முதல் சீன உளவு செய்மதி ஈரான் கைகளில் 

2024 முதல் சீன உளவு செய்மதி ஈரான் கைகளில் 

அண்மையில் சவுதி Price Sultan Air Base தளத்து ஓடு பாதையில் தரித்து நின்ற விலை உயர்ந்த அமெரிக்க உளவு விமானம் ஒன்றையும், ஜோர்டான் Muwaffaq Salti Air Base தளத்தில் நிலை கொண்டிருந்த விலை உயர்ந்த அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை ஏவியையும் ஈரான் தனது ஏவுகணைகளால் தந்திரமாக தாக்கி அழித்திருந்தது.

இந்த தாக்குதல்களால் அமெரிக்கா வியப்பு அடைந்திருந்தது. ஈரான் இவ்வகை தாக்குதல் ஒன்றை செய்யும் என்று அமெரிக்கா எதிர்பார்த்து இருக்கவில்லை.

அப்போது ரஷ்யாவோ அல்லது சீனாவோ தமது செய்மதிகள் மூலம் அமெரிக்க படைகளை உளவு பார்த்து ஈரானுக்கு தேவையான தரவுகளை வழங்கி இருக்கும் என்றே நம்பப்பட்டது. குறிப்பாக ரஷ்யாவே ஈரானுக்கு உதவியிருக்கும் என்று பலராலும் கூறப்பட்டது.

ஆனால் இன்று புதன்கிழமை Financial Times வெளியிட்ட செய்தி ஒன்றின்படி ஈரான் தனது சொந்த செய்மதி ஒன்றை பயன்படுத்தியே அமெரிக்க படைகளின் நிலைகளை அறிந்துள்ளது.

ஈரானிடம் இவ்வகை உளவு பார்க்கும் செய்மதி ஒன்று இருந்ததாக முதலில் அறியப்படவில்லை. ஈரான் இவ்வகை செய்மதி ஒன்றை எப்போதும் ஏவியிருக்கவில்லை.

தற்போது வெளிவந்த செய்திகளின்படி சீன நிறுவனமான Earth Eye Co தான் ஏவி சேவையில் இருந்த TEE-01B என்ற உளவு பார்க்கும் செய்மதியை 2024ம் ஆண்டு விற்பனை செய்துள்ளது என்கிறது Financial Times.

இந்த செய்மதி மார்ச் 13ம், 14ம், 15ம் திகதிகளில் சவுதி Price Sultan விமான தளத்தை படம்பிடித்து உள்ளது. இங்கே 14ம் திகதியே தாக்குதல் இடம்பெற்றது.

ஒரு நாடு செய்மதி ஒன்றை ஏவி அது சேவைக்கு வந்த பின் இன்னோர் நாட்டுக்கு இரகசியமாக விற்பனை செய்வது ஆயுத விற்பனையில் ஒரு புதிய திருப்பம். இதனால் யாரிடம் என்ன செய்மதி இருக்கு அல்லது இல்லை என்று இனிமேல் கூறமுடியாது.