ஈரானின் அணு உலைகள்அழியவில்லை, அதனால் ரம்ப் மூர்க்கம்?

ஈரானின் அணு உலைகள்அழியவில்லை, அதனால் ரம்ப் மூர்க்கம்?

பொதுவாக இராணுவங்கள் தமது மிகப்பெரும் ஆயுதங்களை அவசரப்பட்டு பயன்படுத்துவது இல்லை. அவற்றை பயன்படுத்தி அவை கூறியபடி வெற்றியை தராவிட்டால் பாதிப்பு அதிகம். பதிலுக்கு பயன்படுத்தக்கூடும் என்று மிரட்டுவது தோல்வியை தராது எதிரிக்கு பயத்தை ஏற்படுத்தும்.

தற்போது வெளிவந்துள்ள ஆரம்ப கணிப்புகள் அமெரிக்கா வீசிய GBU-57 வகை குண்டுகள் மலைகளுக்கு அடியில் உள்ள ஈரானின் அணு உலைகளை அழிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த குண்டுகள் சிறிது மேற்பரப்பு அழிவுகளையே ஏற்படுத்தி உள்ளன. பாதகமான இந்த ஆரம்ப கணிப்புகளை கசிய விட்டவர் “low-level loser” என்று ரம்பின் பேச்சாளர் சாடியுள்ளார்.

நேற்றைய தினம் ரம்ப் மிக மூர்க்கமாக இருந்தமைக்கும், இஸ்ரேல் மீது பாய்ந்தமைக்கும் இந்த தோல்வி காரணமாக இருக்கலாம். GBU-57 குண்டுகள் ஈரானின் அணு உலைகளை அழிக்க முடியாது என்றால் ஆழமாக மலைகளுக்கு கீழ் அமைக்கப்பட்ட இந்த அணு உலைகளை அழிக்க அமெரிக்காவிடம் வேறு குண்டுகள் இல்லை. 

மேற்படி கணிப்பு உண்மை என்றால் இனிமேல் அணு உலைகளை குண்டு வீசி அழிப்பேன் என்று அமெரிக்கா மிரட்ட முடியாது.

அத்துடன் சீனா போன்ற நாடுகளும் GBU-57 குண்டுகளின் இயலாமையை தற்போது அறிந்திருக்கும்.

அமெரிக்க சனாதிபதி சட்டப்படி அமெரிக்க காங்கிரசுக்கு தாக்குதல் விபரம், அழிவு விபரம் ஆகியவற்றை தெரியப்படுத்த வேண்டும். ஆனால் ரம்ப் அவ்வாறு செய்வதை இழுத்தடித்து வருகிறார். இறுதியான கூற்றுப்படி ரம்ப் இதை வெள்ளிக்கிழமை செய்யவுள்ளார்.

குண்டுகளை வீசியவுடன் ரம்ப் ஈரானின் அணு உலைகள் “completely and totally obliterated” என்று கூறியிருந்தார். அதாவது அவை முற்றாக அழிக்கப்பட்டுள்ளன என்று அவசரப்பட்டு கொண்டாடி இருந்தார். ஆனால் உண்மை மாறாக இருக்கலாம்.