அமெரிக்க முன்னிலை விவசாய உற்பத்திகளில் ஒன்று சோயா. ஆனால் tofu போன்ற சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளை அதிகம் உட்கொள்ளும் சீனாவே சோயாவின் மிகப்பெரிய சந்தை. ரம்பின் வரி யுத்தம் காரணமாக அமெரிக்க சோயா சீன சந்தையை வேகமாக இழக்கிறது.
கடந்த ஆண்டு அமெரிக்கா $12 பில்லியன் பெறுமதியான சோயாவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. அது அமெரிக்க சோயா ஏற்றுமதியின் 51% என்கிறது அமெரிக்க Department of Agriculture.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையான 5 மாதங்களில் அமெரிக்கா $2 பில்லியன் பெறுமதியான சோயாவையே சீனாவுக்கு விற்பனை செய்துள்ளது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையான 3 மாதங்களில் சீனாவுக்கு அமெரிக்க சோயா விற்பனை செய்யப்படவில்லை.
இந்த ஆண்டு அமெரிக்கா 4.3 பில்லியன் புசல் சோயாவை உற்பத்தி செய்யும் என்று கணிக்கப்படுகிறது. சீனா அமெரிக்க சோயாவை கொள்வனவு செய்யாததால் அமெரிக்கா 1.69 பில்லியன் புசல் சோயா மட்டுமே ஏற்றுமதிசெய்யும்.
சீனா படிப்படியாக பிரேசிலில் இருந்து சோயாவை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான 8 மாத காலத்தில் சீனா 2.4 புசல் சோயாவை பிரேசிலில் இருந்து கொள்வனவு செய்துள்ளது. அது பிரேசிலின் 76% சோயா ஏற்றுமதி.
அமெரிக்காவில் 2022ம் ஆண்டு புசல் $15 வரையில் விற்பனை செய்யப்பட்ட சோயா தற்போது சுமார் $10 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
கிராமப்புற அமெரிக்க விவசாயிகள் பொதுவாக ரம்ப் ஆதரவாளர்கள்.