புதிய சட்டப்படி பிரித்தானியா செல்லும் அகதிகள் அவர்களின் அகதி நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் நிரந்தர குடியுரிமையை பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று பிரித்தானிய Home Secretary Shabana Mahmood அறிவித்துள்ளார்.
அதனால் இந்த 20 ஆண்டு கால வதிவுரிமை ஒரு தற்காலிக சலுகையாக மாறியுள்ளது. இந்த 20 ஆண்டுகளில் அகதிகளின் நாடுகளின் நிலைமை வழமைக்கு திரும்பினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர்.
ஆனாலும் இந்த 20 ஆண்டுகளில் நன்றாக படித்து அல்லது நல்ல வர்த்தக முயற்சிகள் மூலம் மேற்படி அகதிகள் பெரும் செல்வதை சேமித்து இருந்தால் பிரித்தானியா அவர்களை அவர்களின் செல்வத்துடன் திருப்பி அனுப்புமா? அவர்களுக்கு பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளின் குடியுரிமை என்ன ஆகும்? குழந்தைகளை கொண்டோர் திருப்பி அனுப்பப்படும் நிலை ஏற்பட்டால் குழந்தைகளும் திருப்பி அனுப்பப்படுவார்களா, அல்லது தாயிடம் இருந்து பிரிப்பார்களா?
அத்துடன் 2005ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய சட்டப்படி பிரித்தானியா அகதிகளுக்கு வழங்கி வந்த சலுகைகளையும் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் கொள்ளாத பிரித்தானியா நிறுத்திக்கொள்ளும் அல்லது குறைத்து கொள்ளும்.
பிரித்தானியாவுக்கு அகதிகள் செல்வதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தற்போது அங்கு அகதி நிலை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும். அதன் பின் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
தற்கால மேற்கு நாடுகளின் அகதி சட்டங்கள் ஐரோப்பியரை கருத்தில் கொண்டு இரண்டாம் யுத்த காலங்களில் இயற்றப்பட்டவை. ஆனால் தற்காலத்தில் இந்த சட்டங்களை ஐரோப்பியர் அல்லாதோரே பயன்படுத்துகின்றனர்.
டென்மார்க்கிலும் இவ்வகை சட்டம் உண்டு. அங்கு தற்காலிக அகதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் அகதி நிலைக்கு விண்ணப்பித்தல் அவசியம்.
