பொய் AI செய்தி பரப்பி $300,000 உழைத்த இலங்கையர் 

பொய் AI செய்தி பரப்பி $300,000 உழைத்த இலங்கையர் 

Facebook எங்கும் பொய் செய்திகள், தரவுகள் என்பது யாரும் அறிந்தது. அவ்வாறு பொய் செய்திகள், தரவுகள் Facebook மூலம் பரவுகின்றன என்று Facebook அறிந்தும் வருமானத்தை மட்டும் விரும்பும் Facebook அதை தடுக்கவில்லை.

இலங்கையரான கீத் சூரியபுர (Geeth Sooriyapura) என்பவர் இலங்கையில் இருந்து கொண்டே பிரித்தானிய வெள்ளையர்களை வெறிகொள்ள செய்யும் செய்தியை AI மூலம் உருவாக்கி, பிரித்தானிய வெள்ளையர்களுக்கு பரப்பி $300,000 உழைத்துள்ளார் என்கிறது The Bureau of Investigative Journalism (TBIJ) மற்றும் Institute of Strategic Dialogue (ISD) இணைந்து செய்த விசாரணை.

இவர் ஒரு வெள்ளையர் அல்லாத சிறுபான்மையினர் என்றாலும் இவரின் செய்தி பிரித்தானியாவுக்கு குடிபெயர்வோர்க்கும், இஸ்லாமியருக்கு எதிரான செய்திகளை அவ்வகை செய்திகளால் வெறி கொள்ள வைக்கப்படக்கூடிய வெள்ளையருக்கு பரப்பிபெரும் பணத்தை உழைத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இவர் AI உதவியுடன் லண்டன் மாநகர முதல்வர் Sadiq Khan 40,000 வீடுகளை லண்டனில் பள்ளிவாசல் உடன் அமைத்து அவற்றை இஸ்லாமியருக்கு மட்டும் வழங்கவுள்ளார் என்று ஒரு பொய் செய்தியை பரப்பி இருந்தார். இச்செய்தி பிரித்தானிய வெள்ளையர் மத்தியில் காட்டு தீ போல் வேகமாக பரவியது. பெருமளவு வெள்ளையர் அந்த செய்தியை தம்முள் பகிர, அந்த பக்கங்களில் விளம்பரங்களை பதித்து Facebook உழைக்க, அதில் ஒரு தொகையை சூரியபுர பெற்றுள்ளார்.

இதை அறிந்த Sadiq Khan இது ஒரு பொய் செய்தி என்று அறிவித்தாலும், Facebook கும் சூரியபுரவும் தமது உழைப்பை பெற்றுவிட்டனர்.

இந்த உழைப்பால் செல்வந்தராகிய சூரியபுர தற்போது விலை உயர்ந்த இலங்கை apartment இல் வசித்து, five-star உணவகங்களில் உணவுண்டு ஆடம்பர வாழக்கை வாழ்கிறாராம்.

Facebook, TikTok, YouTube போன்ற தளங்களில் கருத்து பரப்புவோர் (content creators) பொய்யான, காழ்ப்பு கொண்ட, வெறியூட்டும் செய்திகள் வேகமாக பராவும் என்பதை நன்கு அறிவர். உண்மை பின்னர் வெளிவந்தாலும் அவர்களின் உழைப்பு அவர்களின் வங்கிகளை அடைந்துவிடும்.

2024ம் ஆண்டு சுமார் 10% Facebook வருமானம் (சுமார் $16 பில்லியன்) முழு பொய்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டவை என்கிறது இன்னோர் ஆய்வு.

https://www.thebureauinvestigates.com/stories/2025-11-16/king-of-slop-how-anti-migrant-ai-content-made-one-sri-lankan-influencer-rich