இன்று செவ்வாய் வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்ட சவுதி இளவரசர் Mohammed bin Salman னை அமெரிக்க சனாதிபதி ரம்ப் புகழ்ந்து பாடியுள்ளார். இளவரசரிடம் பத்திரிகையாளர் ஜமால் கசோகி (Jamal Khashoggi) படுகொலை தொடர்பாக கேள்வி கேட்ட பத்திரிகையாளரையும் கடுமையாக சாடியுள்ளார் ரம்ப். ஒரு விருந்தினரை மேற்படி பத்திரிகையாளர் நோகடித்துள்ளார் என்று ரம்ப் பாய்ந்துள்ளார்.
2018ம் ஆண்டு அக்காலத்தில் அமெரிக்கராக, Washington Post பத்திரிகையாளராக இருந்த ஜமால் கசோகி என்பவரை துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து படுகொலை செய்து, அமிலங்கள் மூலம் உடல் கரைக்கப்பட்டு, இருப்பிடம் தெரியாது அழிக்கப்பட்டார். கசோகி சவுதி இளவரசருக்கு எதிராக கட்டுரைகளை வெளியிட்டதே இளவரசரின் மூர்க்கத்துக்கு காரணம்.
2021ம் ஆண்டு அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA சவுதி இளவரசர் கட்டளைக்கு அமையவே கசோகி படுகொலை செய்யப்பட்டார் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அனால் இன்று ரம்ப் சவுதி இளவரசருக்கு கசோகி படுகொலை தொடர்பாக எதுவும் தெரியாது என்று கூறி இளவரசரை பாதுகாத்தார்.
இன்றைய சந்திப்பில் சவுதி அமெரிக்காவில் $1 டிரில்லியன் முதலிட அறிவித்துள்ளது. பதிலுக்கு அமெரிக்கா சவுதியை ஒரு Major Non-NATO நட்பு நாடு என்ற நிலைக்கு உயர்த்தி உள்ளது. அத்துடன் அமெரிக்கா F-35s வகை யுத்த விமானங்களை சவுதிக்கு விற்பனை செய்ய இணங்கியுள்ளது. சவுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அணு ஆலைகள் அமைக்கவும் அமெரிக்கா இணங்கியுள்ளது.
