Artificial Intelligence (AI) கணினிகளுக்கு தேவையான அதிநவீன chip களை தயாரிக்க அவசியமான Extreme UltraViolet lithography (EUV) பரிசோதனை அறிவை சீனா இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பெற்று உள்ளது என்று Reuters செய்தி நிறுவன ஆய்வுகள் கூறுகின்றன. இந்த அறிவு சீனாவின் கைகளை அடையக்கூடாது என்பதில் அமெரிக்கா மூர்க்கமாக இருந்தாலும் சீனா அந்த அறிவை பெற்று உள்ளது.
ஐரோப்பா தயாரிக்கும் சுமார் $250 மில்லியன் பெறுமதியான EUV இயந்திரங்கள் மனித முடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு அகலம் கொண்ட circuit வரைபுகளை சிலிக்கன் தகடுகளில் (silicon wafers) வரைய வல்லன.
ஹாங் காங் நகருக்கு அண்மையில் உள்ள Shenzhen என்ற சீன நகரத்திலேயே இந்த இரகசிய ஆய்வு கூடம் உள்ளது. இதன் இரகசியத்தை காப்பதற்காக இதில் பணியாற்றிய அறிஞர்கள் தமது வீடுகளுக்கு செல்லாது ஆய்வு கூடத்திலேயே கிழமைகள் அளவில் தங்க வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு பொய் பெயர்களையும், பொய் அடையாள அட்டைகளையும் சீனா வழங்கி இரகசியத்தை பேணி உள்ளது.
இதுவரை EUV அறிவு ASML என்ற Dutch நிறுவனத்திடம் மட்டுமே இருந்தது. ASML தயாரிக்கும் இயந்திரங்களை பயன்படுத்தியே NVIDIA, AMD போன்ற நிறுவனங்கள் AI chip களை வடிவமைக்க, TSMC, Intel, Samsung போன்ற நிறுவனங்கள் அந்த chip களை உற்பத்தி செய்கின்றன.
சீனா தனது EUV மூல AI chip களை தயாரித்தால் மேற்கூறிய அனைத்து நிறுவனங்களுக்கும் பலத்த போட்டி ஏற்படும். அத்துடன் இவ்வகை chip கள் நவீன இராணுவத்துக்கு அவசியம் என்பதால் சீனா இராணுவம் மேலும் பலப்படும்.
இந்த முயற்சிக்கு சீனா முன்னாள் சீன ASML அறிவாளிகளையும் இரகசியமாக உள்வாங்கியது. இவர்களுக்கு சீனா $420,000 முதல் $720,000 வரையில் signing bonuses உம் வழங்கி, சீனாவில் வீடு கொள்வனாவுக்கும் உதவியும் செய்துள்ளது. இத்துறையில் PhD வரையிலான அறிவு கொண்டவர்களின் ஆய்வுக்கு சீனா $560,000 ஆய்வு grants உம், சொந்த செலவுக்கு $140,000 உம் வழங்கி இருந்தது.
அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளால் தடை செய்யப்பட்ட சீனாவின் Huawei நிறுவனமும் இந்த முயற்சியில் பங்கு கொண்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் வரை சனாதிபதி ரம்ப் மேற்கு நாடுகள் AI chip களை சீனாவுக்கு விற்பனை செய்வதை தடை செய்திருந்தார். ஆனால் அந்த தடையை சில தினங்களுக்கு முன் விலக்க முனைந்தாலும், சீனா மேற்கின் AI chip களை கொள்வனவு செய்ய மறுத்து இருந்தது.
