உங்கள் அழைப்பை ஏற்று உங்கள் வீடு வந்த உங்கள் நண்பர் குடும்பம் ஒன்று தமது வீடு திரும்பும் போது விபத்து ஒன்றில் அகப்பட்டு மொத்தமாக மரணித்து இருந்தால் நீங்கள் பதறுவீர்கள், மரண வீட்டில் முன் நிற்பீர்கள். ஆனால் இந்திய பிரதமர் மோதி உங்களை போன்றவர் அல்ல, அவர் குணம் வேறு.
பெப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் 25ம் திகதி வரை இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இந்தியாவின் 3ம் International Fleet Review (IFR) என்ற நட்பு கடற்படைகளின் சங்கமிப்பு நிகழ்ந்தது (இது ஒரு யுத்த பயிற்சி அல்ல, அணிவகுப்பு மட்டுமே). இதற்கு மோதியின் இந்திய அரசு அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஈரான் உட்பட பல நாடுகளுக்கு அழைப்புகள் விடுத்திருந்தது.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் அழைப்புகளை கைவிட, ஈரான் தனது IRIS Dena என்ற யுத்த கப்பலை விசாகபட்டினத்துக்கு அனுப்பி இருந்தது. இது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை தாக்க முன்னர் இடம்பெற்ற நிகழ்வு.
மேற்படி IFR நிகழ்வு முடிந்த பின் ஈரான் திருப்பிய IRIS Dena கப்பலே மார்ச் 4ம் திகதி அமெரிக்க நீர்மூழ்கியால் இலங்கைக்கு அருகில் தாக்கி அழிக்கப்பட்டது. அங்கு உடன் விரைந்த இலங்கை கடற்படை 32 பேரை காப்பாற்றியும், மேலும் சில உடல்களை மீட்டும் உள்ளது. அந்த கப்பலில் 180 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. ஏனையோர் இருப்பிடம் அறியப்படவில்லை.
தான் இந்தியாவுக்கு அழைத்தவர்கள் நாடு திரும்புகையில் அழிக்கப்பட்டதற்கு பிரதமர் மோதி இதுவரை எந்தவித கவலையையும் தெரிவிக்கவில்லை. அதுதான் மோதியின் குணம்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை தாக்குவதையும் மோதி கண்டிக்கவில்லை.
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை தாக்க சில தினங்களுக்கு முன்னரே மோதி இஸ்ரேல் சென்று இஸ்ரேலின் பாராளுமன்றத்தில் இஸ்ரேலை புகழ்ந்து உரையாற்றியிருந்தார். அந்த நேரம் இஸ்ரேல் ஈரானை தாக்க தயாராகிவிட்டது. தாக்குதல் உண்மையை இஸ்ரேல் மோதிக்கு கூறியிருந்ததா?
இஸ்ரேல் மோதிக்கு ஈரானை தாக்க இருந்தமையை கூறியிருக்கவில்லை என்றால் இஸ்ரேல் மோதியின் உண்மையான நட்பு நாடா? அவ்வாறு இஸ்ரேல் கூறியிருந்தால் அதை ஈரானுக்கு கூறாத மோதி ஈரானின் நண்பனா?
