அமெரிக்காவின் ரேனசீ (Tennessee) மாநிலத்தில் உள்ள Humphreys பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கு குறைந்தது 21 பலியாகியும், 20 பேர் தொலைந்தும் உள்ளனர்.
வெள்ளப்பெருக்கு இடம்பெற்ற பகுதிகள் சனத்தொகை குறைந்த பகுதிகள் என்றாலும், வெள்ளத்தின் வேகம் காரணமாக அழிவுகள் அதிகமாக உள்ளன. தொலைபேசி கட்டுமானங்களும் பாதிப்பு அடைந்ததால் தொலைபேசி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன.
McEwen என்ற இடம் சனிக்கிழமை 24 மணி நேரத்துள் 17 அங்குல (43 cm) மழை வீழ்ச்சியை பெற்றுள்ளது. இது பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் அப்பகுதி பெற்ற அதிக மழையாகும். அதிலும் சுமார் 9 அங்குல மழை வீழ்ச்சி 3 மணித்தியாலத்துள் இடம்பெற்று உள்ளது.
பல வீடுகள், அடித்து செல்லப்பட்ட வாகனங்கள் தற்போது வெள்ளத்துள் மூழ்கி உள்ளன. அப்பகுதி ஊடு செல்லும் US-70 என்ற பெரும் தெரு தற்போது மூடப்பட்டு உள்ளது.
Waverly என்ற இடத்தில் உள்ள கடை ஒன்றில் இருந்து 120 மீட்டர் தூரத்தில் உள்ள ஆறு ஒன்று மேவி, வெள்ள நீர் கடையுள் புக, ஊழியர்கள் மேசைகளில் ஏறி தப்பினர்.