நேற்று வியாழன் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் (Google/Alphabet) சுமார் $500 பில்லியன் பங்கு சந்தை பெறுமதியை ஒரு நாளில் இழந்துள்ளது. செப்டம்பர் 30 திகதியுடன் முடிந்த வர்த்தக காலாண்டில் கூகிள் எதிர்பார்த்த இலாபம் அடையாததே பங்கு சந்தை வீழ்ச்சிக்கு காரணம்.
இதன் பங்கு ஒன்றின் விலை புதன்கிழமை விலையுடன் ஒப்பிடுகையில் சுமார் 13% ஆல் வீழ்ச்சி அடைந்து தற்போது பங்கு ஒன்றின் விலை சுமார் $279 ஆக உள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் இந்த பங்கு ஒன்றின் விலை சுமார் $404 ஆக இருந்தது.
வழமையாக சுமார் 17 மில்லியன் கூகிள் பங்குகளே தினசரி பங்கு சந்தையில் கைமாறும். ஆனால் நேற்று வியாழன் 92.3 மில்லியன் பங்குகள் கைமாறி உள்ளன.
இந்த காலாண்டில் ஒவ்வொரு பங்கும் உழைத்த தொகை (EPS, Earnings Per Share) $2.12 ஆக மட்டுமே உள்ளது. சந்தை எதிர்பார்த்த EPS சுமார் $3.00.
1990களின் ஆரம்பத்தில் இருந்து இணையத்தை தேடும் பணியை நன்றாக செய்து, அதன் மூலம் பெரும் விளம்பர வருவாயை கொண்டிருந்த கூகிள் தற்போது AI வருகையால் பின்தள்ளப்பட்டு உள்ளது.
கூகிள் வியாழன் இழந்த பங்கு சந்தை பெறுமதி வரலாற்றில் இரண்டாவது பெரிய வீழ்ச்சியாகும். Nvidia என்ற AI நிறுவனம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரே நாளில் $589 பில்லியன் சந்தை பெறுமதியை இழந்திருந்தது.
