Air India சேவையை முற்றாக விற்க தீர்மானம்

AirIndia

இந்திய அரசு பெரு நட்டத்தில் இயங்கும் Air India விமான சேவையை 100% விற்பனை செய்ய தற்போது தீர்மானித்து உள்ளது. அத்துடன் கொள்வனவு தொகையும், கட்டுப்பாடுகளும் பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளன. இந்த விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளன.
.
முன்னர் Air India விமான சேவையின் 76% உரிமையை மட்டுமே விற்பனை செய்ய இந்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் எந்தவொரு நிறுவனமும் 76% உரிமையை கொள்வனவு செய்ய முன்வந்திருக்கவில்லை. அதனாலேயே தற்போது 100% விற்பனைக்கு இந்தியா முன்வந்துள்ளது.
.
அத்துடன் முன்னர் Air India விமான சேவை கொண்டிருந்த கடன்களை அடைக்க கொள்வனவு செய்யும் நிறுவனம் $4.92 பில்லியன் (மொத்த கடனான $8.2 பில்லியனின் 80%) ஒதுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கடன்களை அடைக்க $3.26 பில்லியன் ஓதுக்கினால் போதும் என்கிறது இந்தியா.
.
புதிய விமான சேவையின் உரிமையின் 51% இந்திய நிறுவனத்தின் கையில் இருத்தல் அவசியம். மிகுதி 49% உரிமையை வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கலாம்.
.
கொள்வனவுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 17 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
.
சுமார் 120 விமானங்களை கொண்ட Air India சேவை தற்போது 56 உள்ளூர் சேவைகளையும், 42 வெளிநாட்டு சேவைகளையும் செய்கிறது. கடந்த வருடம் இது சுமார் 85 பில்லியன் இந்திய ரூபாய்கள் நட்டத்தை அடைந்திருந்தது.
.