Antivirus குரு McAfee ஸ்பெயின் சிறையில் மரணம்

Antivirus குரு McAfee ஸ்பெயின் சிறையில் மரணம்

McAfee என்ற antivirus software நிறுவனத்தை ஆரம்பித்த John McAfee, வயது 75, இன்று புதன்கிழமை ஸ்பெயின் சிறையில் பிணமாக காணப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில மணித்தியாலங்களுக்கு முன்னரே ஸ்பெயின் நீதிமன்றம் அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தலாம் என்று தீர்ப்பு கூறியிருந்தது.

1987ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட McAfee என்ற antivirus software முதல் தரமான antivirus software ஆக விளங்கியது. அதை ஆரம்பித்த John McAfee antivirus software மூலம் பெரும் செல்வந்தத்தை பெற்று இருந்தார். அனால் விரைவில் அவர் அமெரிக்க வருமானவரி திணைக்களத்துடன் முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டார்.

1994ம் ஆண்டு John தான் ஆரம்பித்த நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்டார். 2010ம் ஆண்டு அந்த நிறுவனத்தை Intel நிறுவனம் $7.7 பில்லியனுக்கு கொள்வனவு செய்திருந்தது.

அமெரிக்க அரசுடன் முரண்பட்ட McAfee மத்திய, மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மறைந்து வாழ ஆரம்பித்தார். 2012ம் ஆண்டு Belize நாட்டில் வாழ்கையில் அவருக்கு அடுத்த வீட்டில் இருந்தவர் ஒருவரின் மரணம் தொடர்பாக McAfee தேடப்பட்டு வந்தார்.

அமெரிக்கா சென்ற அவர் மீண்டும் மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் கைது செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்டபோது அவர் மீண்டும் தலைமறைவானார்.

கடந்த அக்டோபர் மாதம் ஸ்பெயின் நாட்டின் Barcelona நகரில் இருந்து துருக்கி செல்ல முனைந்த வேளையில் அவர் ஸ்பெயின் போலீசால் கைது செய்யப்பட்டார். இன்று அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவது உறுதி ஆகிய பின்னரே அவர் பலியாகி உள்ளார்.