FIFA போட்டியில் ஆர்ஜென்டீனா, குரோஷியா, பிரான்ஸ், மொரோக்கோ

FIFA போட்டியில் ஆர்ஜென்டீனா, குரோஷியா, பிரான்ஸ், மொரோக்கோ

கட்டாரில் இடம்பெறும் FIFA 2022 போட்டிகளில் ஆர்ஜென்டீனா, குரோஷியா, பிரான்ஸ், மொரோக்கோ ஆகியன 4 அணிகள் மட்டுமே அரையிறுதி சுற்றை அடைந்து உள்ளன. இந்த நாலு அணிகளும் தம்முள் போட்டியிட அதில் மூன்று அணிகள் 1ம், 2ம், 3ம் இடங்களை வெற்றி அடையும்.

மேற்படி 4 அணிகளுக்கும் இடையிலான அரையிறுதி போட்டிகள் டிசம்பர் 13ம் மற்றும் 14ம் திகதிகளில் இடம்பெறும். அரையிறுதியில் தோல்வியுறும் 2 அணிகளுக்கிடையில் 3ம் அணிக்கான போட்டி 17ம் திகதி இடம்பெறும். அரையிறுதியில் வெல்லும் 2 அணிகளுக்கிடையில் இறுதி போட்டி 18ம் திகதி இடம்பெறும்.

மொரோக்கோ இந்த ஆண்டே முதல் தடவையாக அரையிறுதி ஆட்டம் வரை வெற்றி அடைந்து வந்துள்ளது. அத்துடன் ஆபிரிக்கா கண்டத்தில் இருந்து FIFA போட்டியில் அரையிறுதி ஆட்டம் வரை சென்ற முதல் நாடாகிறது மொரோக்கோ. இதன் பின் என்ன நடந்தாலும் இதுவரை அடைந்த வெற்றிக்கு நன்றி என்று கொண்டாடுகிறார்கள் மொரோக்கோ மக்கள்.

ஆர்ஜென்டீனா முன்னைய FIFA போட்டிகளில் 1ம் இடத்தை இரண்டு தடவைகளும் (1978, 1986), 2ம் இடத்தை மூன்று தடவைகளும் (1930, 1990, 2014) வென்ற அணி.

பிரான்ஸ் முன்னைய FIFA போட்டிகளில் 1ம் இடத்தை இரண்டு தடவைகளும் (1998, 2018), 2ம் இடத்தை ஒரு தடவையும் (2006), 3ம் இடத்தை இரண்டு தடவைகளும் (1958, 1986) வென்ற அணி.

குரோஷியா முன்னைய FIFA போட்டிகளில் 2ம் இடத்தை ஒரு தடவைகளும் (2018), 3ம் இடத்தை ஒரு தடவையும் (1998) வென்ற அணி.

முன்னர் மொத்தம் 5 தடவைகள் 1ம் இடத்தை வென்ற பிரேசில் இம்முறை அரையிறுதி ஆட்டத்தை அடையவில்லை.