S. P. பாலசுப்ரமணியம் மரணம்

S. P. பாலசுப்ரமணியம் மரணம்

பாடகர்  S. P. பாலசுப்ரமணியம் கரோனாவுக்கு வெள்ளிக்கிழமை (25/09/2020) பலியாகி உள்ளார். இவருக்கு கரோனா தொற்றி இருப்பது முதலில் ஆகஸ்ட் மாதம் அறியப்பட்டு இருந்தது. ஆனால் பின்னர் கரோனா நீங்கி இருந்ததாக அறியப்பட்டது. தொடர்ந்து வைத்தியம் பெற்ற இவர் இறுதியில் பலியானார்.

தற்போது 74 வயதான இவர் தனது 50 ஆண்டு கால இசைத்துறையில் 40,000 க்கும் அதிகமான திரைப்பட பாடல்களை பாடி உள்ளார். அதனால் அதிக பாடல்களை பாடிய Guinness பதிவையும் கொண்டுள்ளார். தமிழ், தெலுகு திரைப்படங்களில் பாடிய இவர் 1981 ஆம் ஆண்டு முதல் Ek Duuje Ke Liye பாடல்கள் மூலம் இந்தியிலும் பிரபலம் ஆனார்.

சிலகாலம் இவர் சராசரி தினமும் 3 பாடல்களை பதிவு செய்துள்ளார். ஒருநாள் இவர் 21 புதிய கன்னட பாடல்களை பதிவு செய்துள்ளார்.

1946 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் (Nellore) என்ற இடத்தில் பிறந்த இவரின் தந்தையாரும் முறைப்படி பயின்ற பாடகர். சென்னைக்கு நகர்ந்த இவர் இளையராஜா போன்றோருடன் இணைந்து இசை குழுவை ஆரம்பித்தார். இசை துறையில் வேரூன்றிய இவர் தனது பொறியியல் படிப்பையும் இடையில் கைவிட்டு இருந்தார்.

1969 ஆம் ஆண்டு MGR நடித்த அடிமை பெண் திரைப்படத்துக்கு பாடியது தமிழ் திரையுலகு தனக்கு முக்கியத்துவம் வழங்க காரணம் என்று இவர் கூறியிருந்தார்.

இவர் 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் பத்ம ஸ்ரீ பட்டத்தையும், 2011 ஆம் ஆண்டு பத்ம பூசன் பட்டத்தையும் பெற்று இருந்தார்.