அடிமை வர்த்தகத்தில் இலாபம் அடைந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

அடிமை வர்த்தகத்தில் இலாபம் அடைந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்

அடிமை வர்த்தகத்தில் (slave trade) தாம் இலாபம் அடைந்துள்ளதாக இன்று வியாழன் பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge) கூறியுள்ளது.

தாம் நேரடியாக அடிமைகளை கொண்டிருக்கவில்லை என்றாலும் அடிமை வர்த்தகம் மூலம் செல்வம் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை, சொத்துக்களை பெற்று மறைமுகமாக அடிமை வர்த்தகத்தில் இலாபம் அடைந்து உள்ளதாகவே கேம்பிரிட்ஜ் கூறுகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்து முதலீடுகளும் அடிமை வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முன்னனி உறுப்பினர் பலர் East India Company, Royal African Company, South Sea Company ஆகியவற்றிலும் உயர் பதிவிகளை கொண்டிருந்துள்ளனர் என்கிறது கேம்பிரிட்ஜ். அடிமை வர்த்தகத்தின் பிரதானிகளான மேற்படி நிறுவனங்கள் மூலம் செல்வம் பெற்றவர்கள் அந்த செல்வதில் சிலதை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வழங்கி உள்ளனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் Fitzwilliam நூதனசாலை South Sea Company மூலம் கொண்ட பணத்தையும், கலை பொருட்களையும் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது என்கிறது கேம்பிரிட்ஜ். பழைய தவறுகளுக்கு நிவாரணம் தேடும் நோக்கில் அடுத்த ஆண்டு இந்த நூதனசாலை அடிமை வர்த்தகம் தொடர்பாக பெரும் கண்காட்சி ஒன்றை நிகழ்த்த உள்ளது.

அத்துடன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் Museum of Archaeology and Anthropology தம்மிடம் உள்ள Benin Bronzes சிலைகளை நைஜீரியாவிற்கு திருப்பி அனுப்புகிறது. இவை 19ம் நூற்றாண்டில் பலவந்தமாக அபகரித்து செல்லப்பட்டன.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மட்டுமன்றி Bank of England, Church of England ஆகியனவும் தாம் அடிமை வர்த்தகத்தில் இலாபம் அடைந்து உள்ளதாக கூறுகின்றன.