அமெரிக்காவின் புதிய குண்டு வீச்சு விமானம் B-21

அமெரிக்காவின் புதிய குண்டு வீச்சு விமானம் B-21

அமெரிக்கா இன்று வெள்ளிக்கிழமை B-21 Raider என்ற தனது புதிய நீண்ட தூர குண்டு வீச்சு விமானத்தை (nuclear bomber) கலிபோர்னியாவின் Palmdale நகரத்தில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளின் பின் அமெரிக்கா இவ்வகை புதிய குண்டு வீச்சு விமானம் ஒன்றை சேவைக்கு எடுப்பது இதுவே முதல் தடவை.

Northrop Grumman நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த புதிய B-21 குண்டு வீச்சு விமானம் பழைய B-2 குண்டு வீச்சு விமானத்தின் வடிவத்தை கொண்டிருந்தாலும், புதிய விமானம் மிகவும் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. B-21 விமானம் ஒன்றின் விலை சுமார் $750 மில்லியன்.

இந்த புதிய B-21 விமானம் 1986ம் ஆண்டு முதல் சேவையில் இருக்கும் Cold War கால B-1, 1997ம் ஆண்டு முதல் சேவையில் இருக்கும் B-2 ஆகிய இரண்டு குண்டு வீச்சு விமானங்களையும் மெல்ல சேவையில் இருந்து நீக்க வழி செய்யும்.

அமெரிக்க விமானப்படை குறைந்தது மொத்தம் 100 புதிய B-21 விமானங்களை கொள்வனவு செய்ய இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் B-2 அறிமுகமான காலத்தில் மொத்தம் 135 விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளதாக கூறியிருந்தாலும் பின்னர் 21 விமானங்களே கொள்வனவு செய்யப்பட்டன.

1997ம் ஆண்டில் B-2 ஒன்றின் விலை சுமார் $2.13 பில்லியன் என்று கூறப்பட்டது. B-2 விமானத்துடன் ஒப்பிடுகையில் B-21 மலிவானது. பழைய B-2 விமானத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் புதிய B-21 விலை குறைந்தது மட்டுமன்றி புதியதின் பராமரிப்பு செலவும் குறைவு.

பழைய B-2 விமானத்தை போலவே புதிய B -21 விமானமும் எதிரிகளின் கண்ணில் படாதிருக்கும் stealth நுட்பத்தை கொண்டது. சாதாரண ராடார் போன்ற கருவிகள் இவற்றை காண முடியாது. அதனால் இவ்வகை விமானங்கள் எதிரியின் நாட்டுக்குள் புகுந்து குண்டை வீசலாம்.

சீனாவும் Xian H-20 என்ற தரமான stealth குண்டு வீச்சு விமானத்தை தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பை சீனா 2016ம் ஆண்டு செய்திருந்தது. 2018ம் ஆண்டில் அந்த தயாரிப்பு வேலைகள் நலமே இடம்பெறுவதாகவும் சீனா கூறியிருந்தது. ஆனால் இதுவரை அந்த விமானத்தை சீனா உலகுக்கு காட்டவில்லை. அமெரிக்காவின் கணிப்புப்படி H-20 சுமார் 8,500 km தூரம் சென்று குண்டுகளை வீச வல்லது.