அமெரிக்காவில் புதையும் இன்னோர் மாடி

அமெரிக்காவில் புதையும் இன்னோர் மாடி

அண்மையில் அமெரிக்காவின் கிழக்கே உள்ள Florida மாநிலத்தில் Surfside என்ற குடியிருப்பு மாடி உடைந்து வீழ்ந்ததால் 28 பேர் மரணமாகியும், 117 பேர் தற்போதும் இருப்பிடம் அறியப்படாதும் உள்ளனர். அதேவேளை அமெரிக்காவின் மேற்கே உள்ள California மாநிலத்து San Francisco நகரிலும் உயர்ந்த மாடி ஒன்று குடியிருப்போரை பயமுறுத்துகிறது.

2009ம் ஆண்டு கட்டப்பட்ட Millennium Tower என்ற 58 அடுக்குகளையும், 605 அடி உயரத்தையும் கொண்ட குடியிருப்பு மாடி இதுவரை 18 அங்குலத்தால் நிலத்துள் புதைந்து உள்ளது. அதாவது ஆண்டுக்கு 1.5 அங்குலத்தால் இந்த மாடி புதைக்கிறது. உரம் இல்லாத நிலத்தில் அளவுக்கு மீறிய உயரத்தில் இந்த மாடியை அமைத்ததே இந்த இடருக்கு காரணம்.

இந்த மாடி புதைவது மட்டுமன்றி சிறிது சரியவும் ஆரம்பித்து உள்ளது. அதனால் இந்த மாடியை சிலர் The Leaning Tower of San Francisco என்றும் அழைப்பர். ஆனாலும் பெருமளவு இரும்புகளை கொண்ட இந்த மாடி உடைந்து விழாது என்று நம்பப்படுகிறது. தற்போது இந்த மாடியின் நிலக்கீழான தூண்கள் 90 அடி வரையே நிலத்துள் செல்கின்றன. அத்தூரம் வரை soft clay வகை மண்ணே உண்டு.

ஒருவர் சுமார் $4 மில்லியன் பெறுமதிக்கு 50ம் மாடியில் ஒரு வீட்டை கொள்வனவு செய்திருந்தார். அவர் தன் வீட்டு தரையில் ஒரு மாபிளை (marble) வைத்து, நில சரிவு காரணமாக அந்த மாபிள் ஒரு திசையில் உருள்வதை வீடியோ மூலம் காண்பித்தும் உள்ளார்.

தற்போது $100 மில்லியன் செலவில் இந்த மாடியை மேலும் உரமாக்கும் வேலைகள் நடைபெறுகின்றன. புதிதாக மேலும் 52 துளைகளை 275 அடி வரை நிலத்துக்கு கீழே உள்ள bedrock வரை கிண்டி அங்கிருந்து புதிய பலமான தூண்கள் அமைத்து மாடியை பலப்படுத்தப்படும்.

நகரின் மத்தியில் உள்ள இந்த மாடியில் சுமார் 400 வீடுகள் உள்ளன. ஒவ்வொன்றும் $1 மில்லியனுக்கும் மேலாக பெறுமதி கொண்டவை.