அமெரிக்கா, சீனா கூட்டாக கையிருப்பு எரிபொருளை விடுவிக்கும்

அமெரிக்கா, சீனா கூட்டாக கையிருப்பு எரிபொருளை விடுவிக்கும்

அமெரிக்காவும் சீனாவும் தம்மிடம் உள்ள எரிபொருள் கையிருப்பை கூட்டாக சந்தைக்கு விட இணங்கி உள்ளதாக கூறப்படுகிறது. உலகம் எங்கும் வேகமாக அதிகரித்துவரும் எரிபொருள் விலை உலக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்ற பயம் காரணமாகவே இவ்வாறு கூட்டாக கையிருப்பை விடுவிக்க அமெரிக்க சனாதிபதி பைடென் சீனா ஜனாதிபதி சீ ஜின் பிங்கிடம் கேட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

அவசரகால பாவனைக்கென அமெரிக்கா சுமார் 727 மில்லியன் பரல் எண்ணெய்யை பதுக்கி வைக்கிறது. சீனா சுமார் 200 மில்லியன் எண்ணெய்யை பதுக்கி வைக்கிறது. அமெரிக்காவின் கையிருப்பு சுமார் 90 தினங்களுக்கு போதுமானது. சீனாவின் கையிருப்பு சுமார் 50 தினங்களுக்கு போதுமானது.

எண்ணெய் விலை மிகையாக அதிகரிக்கும் காலத்தில் அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தமது கையிருப்பை சந்தைக்கு விடுவிப்பதன் மூலம் விலையை குறைக்கலாம். உலகம் எங்கும் அதிகரிக்கும் பணவீக்கத்தையும் இது சிறிது குறைக்கலாம்.

சீனா உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்கும் நோக்கில் இரண்டு மாதங்களுக்கு முன் கையிருப்பில் இருந்து 7.4 மில்லியன் பரல்களை சந்தைக்கு விட்டிருந்தது.

இந்த செய்தி வெளிவந்த உடனேயே பரல் ஒன்றுக்கான எண்ணெய் விலை சந்தையில் சுமார் $3.00 ஆல் (3.7%) குறைந்து உள்ளது.