அமெரிக்கா-சீனா 90 நாள் பொருளாதார யுத்த நிறுத்தம்

US_China

இன்றைய G20 அமர்வின்போது அமெரிக்காவும், சீனாவும் தமது பொருளாதார யுத்தத்தை 90 நாட்களுக்கு இடைநிறுத்த இணங்கி உள்ளன. ஆனால் வரும் 90 நாட்களுக்குள் இறுதி தீர்வு ஒன்று ஏற்படாவிடின் இரு பகுதிகளும் தாம் நடைமுறை செய்துள்ள மேலதிக இறக்குமதி வரிகளை (tariff) அதிகரிக்கும்.
.
தற்போது அமெரிக்கா சீனாவில் இருந்து வரும் $200 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு 10% மேலதிக இறக்குமதி வரி அறவிடுகிறது. இந்த மாத இறுதிக்குள் சீனா அமெரிக்காவின் வேண்டுகோள்களுக்கு இணங்காவிடின் 10% வரி 25% வரியாக அதிகரிக்கப்படும் என்று ரம்ப் கூறியிருந்தார். ஆனால் இன்றைய இணைக்கப்படி 10% வரியே தொடர்ந்து 90 நாட்களுக்கு நடைமுறை செய்யப்படும்.
.
சீனாவும் தற்போது அமெரிக்காவில் இருந்து வரும் $110 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு மேலதிக பதில் இறக்குமதி வரிகளை நடைமுறை செய்துள்ளது. வரும் 90 நாட்களுக்கு சீனாவும் அந்த வரிகளை அதிகரிக்காது வைத்திருக்கும்.
.
2017 ஆம் ஆண்டில் அமெரிக்கா சுமார் $506 பில்லியன் பெறுமதியான பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்திருந்தது. அதேவேளை சீனா $130 பில்லியன் பெறுமதியான பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருந்தது.
.