அமெரிக்க ஆயுதங்களை குற்ற முறையில் பயன்படுத்துகிறது இஸ்ரேல்

அமெரிக்க ஆயுதங்களை குற்ற முறையில் பயன்படுத்துகிறது இஸ்ரேல்

இஸ்ரேல் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முரணான முறையில் பயன்படுத்தி இருக்கலாம் என்று இன்று வெள்ளிக்கிழமை பைடென் அரசு கூறியுள்ளது. ஆனாலும் அவற்றை உறுதி செய்ய தம்மிடம் திடமான ஆதாரங்கள் இல்லை என்றும் பைடென் அரசு கூறியுள்ளது.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ironclad உறவு உள்ளது என்று எப்போதும் கூறும் அமெரிக்கா முடிந்த அளவில் இஸ்ரேலின் குற்றங்களை நீண்ட காலம் மறைத்து வந்துள்ளது. இம்முறை காசாவில் இஸ்ரேல் செய்யும் குற்றங்களை மறைக்க முடியாது முழிக்கிறது அமெரிக்கா. குறிப்பாக தொலைபேசிகள் மூலம் பெறப்படும் படங்கள் உண்மைகளை வெளியே தெரிவிக்கின்றன.

அமெரிக்க சட்டப்படி சனாதிபதி அமெரிக்க ஆயுதங்களை பெறும் நாடுகள் அவற்றை அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு அமைய பயன்படுத்துகின்றன என்பதை அமெரிக்க காங்கிரசுக்கு உறுதி செய்தல் அவசியம்.

பைடென் அரசின் கூற்று பல அமெரிக்க திணைக்களகங்கள் சேகரித்த தரவுகளின் அடிப்படையிலானது.

உதாரணமாக அக்டோபர் 31ம் திகதி காசா தொடர்மாடி (apartment) ஒன்றை காரணம் இன்றி இஸ்ரேல் தாக்கியதால் 106 பொதுமக்கள் பலியாகி இருந்தனர்.

இஸ்ரேல் காசாவில் செய்வதை வேறு நாடு ஒன்று செய்திருந்தால் அமெரிக்கா தேவையான ஆதாரங்களை முன்வைத்திருக்கும். அமெரிக்காவிடம் தரமான தகவல் சேகரிப்பு கட்டமைப்பு உண்டு.

இஸ்ரேல் மீது அமெரிக்கா சுமத்தும் இந்த குற்றச்சாட்டு அரைகுறை குற்றச்சாட்டு என்றாலும் இது வரலாற்றில் முதல் தடவை.

ஹமாஸின் தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் செய்த தாக்குதல்களுக்கு இதுவரை சுமார் 35,000 பலஸ்தீனர் பலியாகி உள்ளனர். அவர்களின் பெரும்பாலானோர் பெண்களும் சிறுவர்களும்.