அமெரிக்க காபூல் தாக்குதலுக்கு 10 பொதுமக்கள் பலி

அமெரிக்க காபூல் தாக்குதலுக்கு 10 பொதுமக்கள் பலி

நேற்று ஞாயிறு அமெரிக்க விமானப்படை ஏவிய ஆளில்லா விமானம் மூலமான ஏவுகணை தாக்குதலுக்கு குறைந்தது 10 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. காபூலில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது தாக்கிய பொழுதே மேற்படி குடும்பம் பலியாகி உள்ளது. இந்த செய்தியை தாம் ஆராய்வதாக அமெரிக்கா கூறியுள்ளது.

பலியானவர்களில் Malika என்ற 2 வயது சிறுமியும் ஒருவர். மரணித்தவருள் இன்னொருவர் முன்னர் அமெரிக்க படைகளுக்கு மொழிபெயர்ப்பு தொழில் செய்ததாகவும், அவர் வெளிநாட்டுக்கு தப்ப விசாவுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ISIS-K உறுப்பினர் ஒருவர் (ISIS Khorasan மாநிலம்) தாக்குதலுக்கு தனது காரை தயார் செய்யும் பொழுதே தாம் அந்த காரை தாக்கியதாக அமெரிக்கா கூறியுள்ளது.

கடந்த வியாழன் காபூல் விமான நிலையம் அருகே ISIS-K மேற்கொண்ட தாக்குதலுக்கு 13 அமெரிக்க படையினரும், குறைந்தது 170 ஆப்கானித்தான் பொதுமக்களும் பலியாகி இருந்தனர். மேலும் 18 அமெரிக்க படையினரும், 200 பொதுமக்களும் காயப்பட்டு உள்ளனர்.

நாளை செவ்வாய் அமெரிக்க படைகள் முற்றாக ஆப்கானித்தானில் இருந்து வெளியேறிவிடும் என்று அமெரிக்க சனாதிபதி பைடென் கூறியுள்ளார்.