அம்ரிட்பால் சிங்கை தேடி இந்திய காவல் 1 கிழமை வேட்டை

அம்ரிட்பால் சிங்கை தேடி இந்திய காவல் 1 கிழமை வேட்டை

அம்ரிட்பால் சிங் (Amritpal Singh) என்பவரை கைது செய்ய இந்திய காவல்துறை கடந்த ஒரு கிழமையாக தேடுதல் வேட்டை செய்கிறது. புஞ்சாப் சீக்கியரான அம்ரிட்பால் மீண்டும் புஞ்சாப் பிரிவினையை தூண்டுகிறார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு.

1993ம் ஆண்டு புஞ்சாப்பில் பிறந்த அம்ரிட்பால் 3ம் ஆண்டுடன் கல்லூரி படிப்பை நிறுத்தி இருந்தார். 2012ம் ஆண்டில் இவர் டுபாய் சென்று பெற்றோரின் போக்குவரத்துக்கு வர்த்தகத்தில் பணியாற்றினார். 2019ம் ஆண்டு இவர் புஞ்சாப் உழவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி இருந்தார். இவர் பின்னர் Waris Panjab De (புஞ்சாப்பின் வாரிசுகள்) என்ற சீக்கிய குழுவில் அங்கம் கொண்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் டுபாயில் இருந்து இந்தியா திரும்பினார். அத்துடன் தனது கனடிய குடியுரிமையையும் இவர் கைவிட்டார். இவர் மெல்ல சீக்கியரை சீக்கியர் தான் ஆட்சி செய்யலாம் என்ற வாதத்தை முன்வைத்தார். இவர் தம்மை முதலில் பிரித்தானியர் அடிமைப்படுத்தியதாகவும், தற்போது இந்துக்கள் அடிப்பைப்படுத்துவதாகவும் மதவாத அரசியல் பேசினார்.

காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் மதவாத அரசியல் செய்யாது பிந்தரன்வாலே காலத்து சீக்கிய மதவாதத்தை அழிய வைத்தது. ஆனால் இந்து மதவாத பா.ஜ. மீண்டும் ஒரு சீக்கிய மதவாதத்தை கையெடுத்து உள்ளது.

இந்தியாவில் இஸ்லாமியர் 14.2% என்றாலும் அவர்கள் நாடு முழுவதும் பரந்து வாழ்வதால் ஒரு மாநிலத்தையாவது அவர்கள் தம் கட்டுப்பாடில் கொள்ளவில்லை. ஆனால் 1.7% சீக்கியர் புஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மை. அந்த மாநிலத்தை கைவிடல் பா.ஜ வுக்கு இலகுவானது அல்ல.

பிந்தரன்வாலே காலத்து சீக்கிய மதவாதம் கனடா உட்பட பல மேற்கு நாடுகளின் மறைமுக ஆதரவை பெற்று இருந்தது. அப்போது மேற்குக்கு இந்தியா எதிரி இலக்கம் 2, சோவியத்துக்கு அடுத்தது. Air India குண்டு கனடாவிலேயே தயாரித்து விமானத்தில் வைக்கப்பட்டது. அவ்வாறே இலங்கையும் எரிந்தது.

ஆனால் தற்போது நிலைமை வேறு. சீனாவை எதிர்கொள்ள மேற்குக்கு இந்தியா அவசியம். அதேவேளை Brampton போன்ற சீக்கியர் அதிகமான இடங்களில் சீக்கிய வாக்குகள் அவசியம். பிரித்தானியாவில் சுமார் 500,000 சீக்கியர் உள்ளனர். அதனால் இம்முறை மேற்கின் அரசியல் விலாங்கு போல் வாலும் தலையும் காட்டவேண்டி இருக்கும்.