அயலவன் கோழியை நம்பி அடைக்கு வைக்காதே

Ayalavan

யாழ்பாணத்து வலம்புரி பத்திரிகை “சூரன் போரின் தத்துவத்தை உணர்ந்து கொள்மினே!” என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் ஒன்றை 2016-11-05 அன்று வெளியிட்டு உள்ளது. இதில் சொல்லப்பட்டு உள்ள கருத்தையிட்டு அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை.
.

இந்த தலையங்கம் (இலங்கை) “தமிழர்களும் வல்லமைமிக்க அமெரிக்கா, இந்தியா  போன்ற நாடுகளைச் சிக்கனப் பிடித்து எங்களுக்கு உரிமை கிடைத்தால் உங்களுக்கு என்ன நன்மை என்பதை எடுத்துரைத்து, சீனாவின் பிரசன்னத்தைக் காட்டி, முன்னைய ஆட்சி மீண்டு(ம்) வந்தால் நிலைமை என்னவாகும் என்பதை இடித்துரைத்து தமிழ் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று சதா கேட்டால் அமெரிக்காவும் இந்தியாவும் ஏதோவொரு வகையில் அதற்கு இசையும்.” என்கிறது.
.

ஐயா ஆசிரியரே, உங்களுக்கு ஞாபகமறதி அதிகமோ? உங்களுக்கு இலங்கையில் சுமார் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் அடி, நுனி தெரியுமோ? நீங்கள் இப்போது செங்கம்பளம் போட்டு (மீண்டும்) வரவழைக்க முனையும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும், ஜே. ஆர்., இந்திராகாந்தி ஆட்சி காலத்தில், பரம எதிரிகளாக இருந்தபோது நடாத்திய பினாமி யுத்தமே (proxy war) இலங்கை யுத்தம். அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் இடையேயான Cold War முடிந்து, சீனாவின் வளர்ச்சி மிகைப்பட, இந்தியாவும் அமெரிக்காவும் வேறுவழி இன்றி அவசரமாக அன்புகொள்ள, இலங்கை யுத்தமும், இந்தியா பார்த்திருக்க, 2009இல் முடிவடைந்து இருந்தது.
.

இப்போ நீங்கள் மீண்டும் அதே கூத்தை அரங்கேற்ற முனைகிறீர்கள். நடிகர்கள் வேறு என்றாலும் கதை ஒன்றே. புது கூத்தின் பினாமி யுத்த எதிரிகள் சீனாவும் இந்தியாவும்.
.
ஐயா ஆசிரியரே அந்நியனின் அறிவை சப்பி, துப்பி பட்டம் பெற்று வாழும் எம்மறிவை மிகையாக எடைபோடாதீர். அவ்வறிவை நம்பி, வல்லரசுகளின் விடயங்களில் தலையிட்டு மீண்டும் ஒரு முள்ளிவாக்காலை நாடாதீர். இந்த எச்சரிக்கை சிங்களத்துக்கும் பொருந்தும். அவர்கள் இழந்த இழப்புக்களும் அதிகம்.
.

ஆயிரக்கணக்கில் இலங்கை தமிழ் இளைஞர்களை இந்தியாவுக்கு அழைத்து, முன்னாள் இந்திய இராணுவ அதிகாரிகளால் ஆயுத பயிற்சி வழங்கி, சுமார் 30 வருடங்களாக யுத்தத்தை வளர்த்து பின் முள்ளிவாக்காலில் கைவிட்ட இந்தியாவையா நீங்கள் மீண்டும் அழைக்கிறீர்கள்? IPKF இலங்கையில் நடாத்திய கொலைகள், கொடூரங்கள் எல்லாம் மறந்து போயினவோ? ஆளுக்கொரு வீடு, வீட்டுக்கொரு கிணறு, உங்களுக்கு ஏன் தமீழீழம் என்று IPKF படையினர் வினாவியது தெரியாதோ?
.

சாதாரண தமிழநாட்டு தமிழர்களுக்கு மட்டும் இலங்கை தமிழரில் சிறிது அக்கறை இருக்கலாம். ஆனால் கோணிப்பைகளுடன் அரசியல் வந்து, குடும்பமாக குபேரராகிய தமிழ்நாட்டு அரசியல் முதலைகளிடம் இலங்கை தமிழர் மீதான அக்கறையை எதிர்பார்ப்பது மடமை. MGR தனது இராணுவம் போல் புலியை வளர்க்க, போட்டிக்கு கருணாநிதி ஏனைய இலங்கை இயக்கங்களை வளர்க்க, நாமும் தமிழ்நாட்டு சாக்கடை அரசியலில் மூழ்கியது மறந்தீரோ?
.
ஏனைய 28 இந்திய மாநிலத்தவர்களுக்கும் தமிழும், சிங்களமும் ஒன்றுதான். இலங்கை தமிழரும், சிங்களவரும் இந்தியாவில் இருந்தே வந்திருக்கலாம் என்று கருதும் இந்தியர்கள் இப்படி கருதுவதில் தப்பென்ன?
.

நீங்கள் அழைக்கவிருக்கும் அடுத்த நண்பன் அமெரிக்கா. ஐயா ஆசிரியரே, யாழ்பாணத்து பத்திரிகைகள் NASAவை நாச வேலை செய்பவர் என்றும் CIAயை ஏகாதிபத்தியத்தின் கூலிப்படை என்றும் வசை பாடியதை மறந்தீரோ? பாலஸ்தீனரின் உரிமைகளையே முன்னின்று மறுக்கும் இவர்களா உங்கள் நலனில் அக்கறை கொள்வார்?

.
ஆங்கிலத்தில் “fool me once, shame on you; fool me twice, shame on me” என்பார்கள். ஆங்கிலம் எதற்கு, தமிழில் “சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” என்பார்களே அதுவும் தெரியாதா? தமிழில் ‘ஏறு’ என்பதை நியாயப்படுத்தவும் கதைகள் உண்டு, ‘இறங்கு’ என்பதை நியாப்படுத்தவும் கதைகள் உண்டு. இக்கதைகளை நம்பி காலை விடாதீர். உங்களுக்கென்றே உடன் உருவாக்கிய “அயலவன் கோழியை நம்பி அடைக்கு வைக்காதே” என்ற புதுமொழியை தருவதைவிட வேறு வழி  இல்லை.
.

இலங்கை யுத்த உண்மையை இங்கே படிக்க:
http://www.navakudil.com/dont-call-it-civil-war-please/