அஸ்ரேலியாவில் இருந்து மீள்கிறது சம்பந்தர் சிலை

அஸ்ரேலியாவில் இருந்து மீள்கிறது சம்பந்தர் சிலை

தற்போது National Gallery of Australia என்ற அஸ்ரேலிய நூதனசாலையில் இருக்கும் சம்பந்தர் சிலை மீண்டும் இந்தியா திரும்பவுள்ளது. இது தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்டு, பின் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. அதையே அஸ்ரேலியா கொள்வனவு செய்திருந்தது. இந்த 12ம் நூற்றாண்டு சிலை சுமார் $2.2 மில்லியன் பெறுமதியானது என்று கூறப்படுகிறது.

இந்த சோழ காலத்து சிலையுடன் மொத்தம் 14  திருடப்பட்ட புராதன பொருட்கள் அஸ்ரேலியாவை அடைந்து உள்ளன. அவை பெரும்பாலும் தமிழ்நாட்டு சைவ பொருட்களே. குயாராத்தினரை கொண்ட குடும்ப ஓவியம் ஒன்றும் அதில் அடங்கும்.

கபூர் (Subhash Kapoor) என்ற முன்னாள் நியூ யார்க் கலைப்பொருள் வர்த்தகர் (art dealer) இந்த திருட்டுக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்று இந்தியா கருதுகிறது. இவர் மீது இந்தியா தற்போது வழக்கு தொடர்கிறது. ஆனால் இவர் தனக்கும் திருட்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்கிறார். மேற்படி 14 பொருட்களில், 13 பொருட்களுக்கும் கபூருக்கும் இடையில் தொடர்புகள் உண்டு.

கபூர் மீது அமெரிக்காவும் விசாரணைகள் செய்கிறது. Operation Hidden Idol என்ற நடவடிக்கை மூலம் அமெரிக்காவும் சில புராதன பொருட்களை கபூரிடம் இருந்து கைப்பற்றி உள்ளது. அமெரிக்காவில் உள்ள கபூரை இந்தியாவுக்கு நாடுகடத்த இந்தியா கேட்டுள்ளது. இவர் நியூ யார்க் நகரில் Arts of the Past என்ற நூதனசாலையை கொண்டிருந்தவர்.

கபூரிடம் இருந்து கொள்வனவு செய்திருந்த $5 மில்லியன் பெறுமதியான சிவன் சிலை ஒன்றை அஸ்ரேலியா ஏற்கனவே இந்தியாவுக்கு அனுப்பி இருந்தது.