இந்தோனேசிய எரிமலை குமுறலுக்கு 13 பேர் பலி

இந்தோனேசிய எரிமலை குமுறலுக்கு 13 பேர் பலி

இந்தோனேசியாவின் Semeru என்ற எரிமலை சனிக்கிழமை முதல் மீண்டும் குமுற ஆரம்பித்து உள்ளது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் ஆரம்பித்த இந்த குமுறலுக்கு இதுவரை குறைந்தது 13 பேர் பலியாகி உள்ளனர். குறைந்தது 11 கிராமங்கள் எரிமலை சாம்பலால் மூடப்பட்டுள்ளன.

எரிமலை உருவாக்கும் வாயு, சாம்பல் ஆகியன உயிர்களுக்கு ஆபத்தானவை. அதனால் மலையில் இருந்து 5 km தூரம் வரை உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு நகர்ந்து உள்ளனர்.

இப்பகுதியில் 15,000 மீட்டர் (50,000 அடி) உயரம்வரை விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. எரிமலை சாம்பல் துகள்கள் விமானங்களுக்கு ஆபத்தானவை. இந்த மலையின் உச்சி சுமார் 3,676 மீட்டர் (12,060 அடி) உயரத்தில் உள்ளது.

1818ம் ஆண்டு முதல் இந்த மலை குறைந்தது 55 தடவைகள் குமுறி உள்ளது. 1967ம் ஆண்டு முதல் குமுறும் நிலையிலேயே எப்போதும் உள்ளது.

Mahameru (அல்லது Maha Sumeru) என்ற இந்த மலையின் பெயர் சமஸ்கிரதத்தில் இருந்து வந்தது. இது இந்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட மலை என்று கூறும் கதைகளும் உண்டு. இந்த மலை பழைய இந்து ஆலயங்கள் உள்ள பாலி பகுயிலேயே உள்ளது.

இந்தோனேசியாவில் சுமார் 125 எரிமலைகள் உள்ளன.