ஏழு மாதங்களின் பின் பைடென், சீ உரையாடல்

சுமார் 7 மாதங்களின் பின் அமெரிக்க சனாதிபதி பைடெனும் (Biden), சீன சனாதிபதி சீ ஜின் பிங்கும் (Xi JinPing) தொலைபேசி மூலம் உரையாடி உள்ளனர். சீன நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. இரு நாடுகளும் இணங்கும் விசயங்களும், முரண்படும் விசயங்களும் பேசப்பட்டுள்ளன.

இந்த உரையாடலை அமெரிக்க சனாதிபதி பைடெனே ஆரம்பித்து இருந்தார். இந்த உரையாடலில் இருதரப்பும் பல மட்டங்களில் தொடர்ச்சியான தொடர்புகளை ஏற்படுத்த இணங்கி உள்ளன. முன்னாள் சனாதிபதி ரம்ப் காலத்தில் முற்றாக முறிந்து இருந்த தொடர்புகளை மீண்டும் ஆரம்பிப்பதே நோக்கம்.

கடுமையான தடைகளை சீனாவிலிருந்தான பொருட்கள் மீது விதித்து, அதன் மூலம் சீனாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுள் எடுக்கலாம் என்றே ரம்ப் அரசு நம்பி இருந்தது. ஆனால் சீனா அமெரிக்காவுக்கு அப்பால் தனது பொருளாதாரத்தை வளர்த்து, அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் அகப்படாது உள்ளது.

அடுத்த மாதம் இடம்பெறவுள்ள G20 மாநாட்டில் பைடெனும், சீயும் பங்கு கொள்ளவும் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் தொடர்ந்தாள் அந்த மாநாட்டில் பைடென்-சீ சந்திப்பு இடம்பெறுவது கைகூடாமல் போகலாம் என்றும் கருதப்பட்டு இருந்தது. இன்றைய தொலைபேசி தொடர்பு பைடென்-சீ சந்திப்புக்கும் வழிவகுக்கலாம்.

அதேவேளை அமெரிக்க வர்த்தகங்களும் சீனாவுடன் முரண்படுதலை குறைக்குமாறு பைடென் அரசுக்கு அழுத்தம் வழங்கி வருகின்ற. ரம்ப் விதித்த மேலதிக வரிகளை அமெரிக்க நிறுவனங்களே செலுத்துகின்றன, சீனா அல்ல.