ஐந்து தினங்களில் 8 நகர்களை தலிபான் கைப்பற்றியது

ஐந்து தினங்களில் 8 நகர்களை தலிபான் கைப்பற்றியது

கடந்த 5 தினங்களில் ஆப்கானிஸ்தான் ஆயுத குழுவான தலிபான் மொத்தம் 8 மாநில தலைநகரங்களை அரசிடம் இருந்து கைப்பற்றி உள்ளது. அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறிய பின் தலிபான் பல சிறிய, பெரிய நகரங்களை கைப்பற்றி, வேகமாக தனது கட்டுப்பாட்டை நடைமுறை செய்து வருகிறது.

இந்தியாவின் ஆதரவு கொண்ட அரசு வேகமாக வலுவிழந்து வருவதால் இந்தியாவுக்கு இது இன்னோர் தலையிடியாக மாறி உள்ளது. பாகிஸ்தானுக்கு அடுத்த பக்கத்தில் இந்தியா தனது ஆளுமையை கொண்டிருக்க விரும்பியது. ஆனால் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறிய பின், நிலைமை இந்தியாவுக்கு பாதகமாக மாறி வருகிறது.

இன்று செவ்வாய் ஆப்கானித்தானின் வடக்கே உள்ள Mazar-i-Sharif என்ற நகரத்தில் இருந்த இந்திய முகவர் நிலையத்தை (consulate) மூடி, அங்கிருந்த இந்தியர்களை விசேட விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துள்ளது இந்தியா.

வடக்கே உள்ள Kunduz என்ற நகரம் கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மன் படைகளின் பாதுகாப்பில் இருந்தது. அதுவும் அண்மையில் தலிபான் கைகளில் விழுந்தது. மொத்தம் 59 ஜேர்மன் படையினர் இங்கு முற்காலங்களில் பலியாகி இருந்தனர்.

தற்போது தலிபான் சுமார் 65% நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்று கூறப்படுகிறது. அது மேலும் இடங்களை வேகமாக கைப்பற்றி வருகிறது. அதேவேளை அமெரிக்கா கட்டார் மூலம் தலிபானை பேச்சுகளுக்கு அழைக்கிறது.