கனடாவில் பாரவாகன சாரதிகள் ஊர்வலம், பிரதமர் ஒளிந்தார்

கனடாவில் பாரவாகன சாரதிகள் ஊர்வலம், பிரதமர் ஒளிந்தார்

கனடாவில் பார வாகன சாரதிகள் (truckers) தற்போது பெரும் ஊர்வலம் ஒன்றை தலைநகர் ஒட்டாவாவில் செய்கின்றனர். முன் எச்சரிக்கையாக கனடிய பிரதமர் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு நகர்த்தப்பட்டு உள்ளார்.

அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு நாடுகளில் தற்காலங்களில் ஒவ்வொரு சிறிய விசயங்களிலும் அரசியல் மயமாகி வருகின்றன. இந்த பார வாகன சாரதிகள் ஊர்வலத்தின் பின்னணியும் அரசியலே.

அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் பார வாகன சாரதிகள் ஒவ்வொருவரும் முழுமையாக கரோனா தடுப்பு ஊசி பெற்று இருத்தல் அவசியம் என்ற சட்டம் ஒன்றை அண்மையில் ரூடோ அரசு நடைமுறை செய்து இருந்தது. அதை எதிர்த்தே இந்த ஊர்வலம் ஆரம்பமாகியது.

ஆனால் அமெரிக்கா ஏற்கனவே அங்கு செல்லும் கனடிய பார வாகன சாரதிகள் முழுமையாக கரோனா தடுப்பு ஊசி பெற்று இருத்தல் அவசியம் என்ற சட்டத்தை இந்த மாதம் முதல் நடைமுறை செய்கிறது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்கா கடந்த அக்டோபர் மாதமே செய்து இருந்தது.

அதனால் முழுமையாக தடுப்பு ஊசி பெற்றவர்களே அமெரிக்கா செல்லாம், பின் கனடா திரும்பலாம். அதனால் கனடிய சட்டத்தால் கனடிய சாரதிகள் மேலதிக பாதிப்பை அடையப்போவது இல்லை.

ஆனாலும் இந்த விசயமும் சில்லறை அரசியலுக்கு பலியாகி உள்ளது.

The canadian Trucking Alliance கணிப்பின்படி அமெரிக்க-கனடிய எல்லை கடந்து பார வாகனம் செலுத்தும் சாரதிகளில் சுமார் 85% முதல் 90% சாரதிகள் முழுமையாக கரோனா தடுப்பு ஊசி பெற்று உள்ளனர்.