காசாவில் அதிகரிக்கும் இஸ்ரேல் இராணுவ இழப்புகள்

காசாவில் அதிகரிக்கும் இஸ்ரேல் இராணுவ இழப்புகள்

அக்டோபர் மாதம் 7ம் திகதி பலஸ்தீன ஆயுத குழுவான ஹமாஸ் செய்த மிகப்பெரிய தாக்குதலின் பின் இஸ்ரேல் ஹமாஸை முற்றாக அழிக்க சத்தியம் கொண்டது.

இஸ்ரேல் முதலில் அமெரிக்கா வழங்கிய குண்டுகளை அமெரிக்கா வழங்கிய யுத்த விமானங்கள் மூலம் வீசி, தனது தரப்பில் பெரும் அழிவுகள் இன்றி, காசாவின் பல இடங்களை தரைமட்டம் ஆக்கியது. 

ஆனால் பின்னர் காசாவுள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் மெல்ல இழப்புகளை சந்திக்க ஆரம்பித்துள்ளது. நேற்று செவ்வாய் மட்டும் இஸ்ரேல் 10 படையினரை இழந்துள்ளது. அதில் ஒருவர் கேர்ணல், இன்னொருவர் லெப். கேர்ணல்.

காசாவின் வடக்கே ஹமாஸை அழிக்கும் பணிகள் முடிந்துள்ளன என்று இஸ்ரேல் அறிவித்த பின்னரே மேற்படி இழப்பை இஸ்ரேல் சந்தித்துள்ளது. காசாவின் வடக்கே Shujaiyeh என்ற இடத்தில் ஹமாஸ் ஒளிந்திருந்து மேற்படி தாக்குதலை செய்துள்ளது.

அக்டோபர் மாதம் 31ம் திகதி இஸ்ரேலின் 15 படையினர் சண்டையில் பலியாகி இருந்தனர். இதுவரை குறைந்தது 113 இஸ்ரேலின் படையினர் காசாவில் பலியாகி உள்ளனர்.

காசாவின் தெற்கே உள்ள Khan Younis பகுதியிலும் பலத்த சண்டை இடம்பெறுகிறது.