காபூல் தாக்குதலை செய்த அமெரிக்க படையினர் தண்டிக்கப்படார்

காபூல் தாக்குதலை செய்த அமெரிக்க படையினர் தண்டிக்கப்படார்

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் வீசிய குண்டு ஒன்றுக்கு ஒரே குடும்பத்தை சார்ந்த 10 பேர் பலியாகி இருந்தனர். முதலில் குண்டு வீச்சுக்கு பலியானோர் ISIS உறுப்பினரே என்று அமெரிக்க இராணுவம் கூறி இருந்தது. ஆனால் பல முனைகளில் இருந்து வந்த ஆதாரங்கள் மரணித்தோர் 7 சிறுவர்கள் உட்பட மொத்தம் 10 பொதுமக்கள் மட்டுமே என்று அறியப்பட்டது.

பின்னர் தாம் செய்த விசாரணைகளின்படி பலியானோர் பொதுமக்களே என்று அமெரிக்க இராணுவம் ஏற்றுக்கொண்டு இருந்தது. ஆனால் அந்த தாக்குதலில் பங்கு கொண்ட எந்தவொரு அமெரிக்க படையினரும் தண்டிக்கப்படார் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

தாக்குதலை செய்த இராணுவத்தினர் தண்டிக்கப்படாமைக்கு அமெரிக்காவின் Human Rights Watch (HRW) கண்டனம் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா மற்றைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக இல்லை என்கிறது HRW.

அமெரிக்காவை தளமாக கொண்ட Nutrition and Education International (NEI) என்ற தொண்டர் நிறுவன ஊழியரான Zemari Ahmadi என்பவரும் அவரின் குடும்பத்தினருமே பலியாகி இருந்தனர்.

பிரித்தானியாவை தளமாக கொண்ட Bureau of Investigative Journalism தனது கணிப்பில் 2004ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதல்களுக்கு சுமார் 16,900 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக கூறுகிறது. ஆனால் பெரும்பாலான தாக்குதல்களின் ஆதாரங்கள் பகிரங்கத்துக்கு வந்ததில்லை.

அமெரிக்க படையினரின் மரணத்தை தவிர்க்கும் நோக்கில் முன்னாள் சனாதிபதி ஒபாமா அதிக அளவில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி இருந்தார்.