கிம் ஜொங் உன்: மோதல் என்றால் அது முழு அளவு மோதல்

கிம் ஜொங் உன்: மோதல் என்றால் அது முழு அளவு மோதல்

வடகொரியாவை அமெரிக்கா போன்ற எதிரிகள் தாக்கினால் அதை வடகொரியா முழு அளவிலான (all-out confrontation) யுத்தமாக மாற்றும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் (Kim Jong Un).

வெள்ளிக்கிழமை வடகொரியா தனது Hwasong-17 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் (ICBM, Intercontinental Ballistic Missile) ஏவுகணை ஒன்றை ஏவியது. உயர் கோணத்தில் ஏவியதால் 69 நிமிடங்கள் பறந்த இந்த ஏவுகணை சுமார் 6,041 km உயரம் சென்று, 1,000 km தூரத்தில் விழுந்தது என்று கூறப்படுகிறது.

உரிய கோணத்தில் இந்த கணை ஏவப்பட்டால் இது 15,000 km தூரம் வரை செல்லலாம் என்று ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் Yasukazu Hamada கூறியுள்ளார். Hwasong-17 அணு குண்டையும் காவக்கூடியது என்று கூறப்படுகிறது.

Hwasong-17 உலகத்திலேயே பெரிய திரவநிலை எரிபொருள் கொண்ட, வாகனத்தில் நகர்த்தக்கூடிய ஏவுகணை என்று கூறப்படுகிறது. சுமார் 2.5 மீட்டர் விட்டம் கொண்ட இது எரிபொருள் நிரப்பிய நிலையில் சுமார் 80,000 முதல் 110,000 kg எடை கொண்டிருக்கும் என்று 38 North என்ற அமைப்பு கூறுகிறது.

இந்த ஏவல் தொடர்பாக உரையாட ஐ.நா. பாதுகாப்பு சபை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க வரும் திங்கள் கூடும்.

2017ம் ஆண்டில் ரஷ்யாவும், சீனாவும் வடகொரியாவை தண்டிக்க உடன்பட்டு இருந்தாலும், அதற்கு பின் எப்போதும் இரண்டு நாடுகளும் வடகொரியா மீதான தடைகளை தடுத்து வந்துள்ளன.