குடிவரவாளர் வரி குற்றங்களை வளர்த்த கனடா

குடிவரவாளர் வரி குற்றங்களை வளர்த்த கனடா

புதிதாக கனடாவுக்கு குடிவரவு செய்யும் செல்வந்தர் வரி குற்றங்களை செய்கிறார்கள் என்று அறிந்திருந்தும் கனடா அவற்றை கண்டுகொள்ளாது இருந்துள்ளது என்று தற்போது அறியப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு பெருமளவு பணம் வருவதை விரும்பிய கனடா செல்வந்த குடிவரவாளர் செய்யும் வரி குற்றங்களை மூடி மறைத்து உள்ளது.

1996ம் ஆண்டு Canada Revenue Agency (CRA) என்ற கனடாவின் வரி திணைக்களம் செய்த இரகசிய ஆய்வில் அக்காலத்தில் வான்கூவர் (Vancouver) பகுதிக்கு வரும் செல்வந்தர் மில்லியன் டாலர் பெறுமதியான வீடுகளை கொள்வனவு செய்திருந்தாலும், அவர்களின் வருட குடும்ப வருமானம் சில ஆயிரம் டாலர்களாகவே இருந்துள்ளன. இவர்கள் வேறு நாடுகளில் பெரும் வருமானம் கொண்டிருந்தாலும், அவற்றுக்கு வரி செலுத்தவில்லை என்று நம்பப்படுகிறது.

இக்காலத்திலேயே பிரித்தானியா ஹாங் காங் நகரை சீனாவுக்கு வழங்கி இருந்தது. இக்காலத்தில் BBC போன்ற செய்தி சேவைகளை நம்பிய பல ஹாங் காங் செல்வந்தர் சீன அரசு தமது சொத்துக்களை பறிக்கலாம் என்று கருதி இருந்தனர். அதனால் அவர்கள் வான்கூவர் போன்ற இடங்களுக்கு பெருமளவில் தமது சொத்துக்களை நகர்த்தினர். 2001ம் ஆண்டுக்கு பின் சீன செல்வந்தர்களும் இவ்வழியை பின்பற்றினர்.

மேற்படி ஆய்வு புதிதாக கனடாவுக்கு வரும் செல்வந்தரில் சுமார் 90% மானோர் தமது பிறநாட்டு வருமானத்தை ஒளித்து இருந்துள்ளனர் என்று அறிந்துள்ளது. உதாரணமாக அப்போது மில்லியன் டாலர் வீடு ஒன்றை கொள்வனவு செய்த ஒரு குடிவரவாளர் தனது குடும்பத்தின் ஆண்டு வருமானமாக C$16,430 ஐ மட்டுமே காட்டியுள்ளார். கனடாவில் இது வறுமை கோட்டு வருமானம். இனொருவர் C$2.88 மில்லியன் பெறுமதிக்கு Burnaby பகுதி வீடு ஒன்றை கொள்வனவு செய்திருந்தாலும் C$174.00 ஐ மட்டுமே குடும்பத்தின் ஆண்டு வருமானமாக காட்டி உள்ளார்.

அக்காலத்தில் Burnaby பகுதியில் 46 வீடுகள் C$800,000 க்கும் அதிகமான விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு உள்ளன. அதில் குறைந்தது 33 வீடுகள் புதிய குடிவரவாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் அவர்கள் பதிவு செய்த சராசரி ஆண்டு வருமானம் C$16,000 ஆக இருந்துள்ளது. ஆனால் அதே பெறுமதியை கொண்ட வீடுகளை கொள்வனவு செய்த நீண்டகால கனடியரின் சராசரி ஆண்டு வருமானம் C$263,701 ஆக இருந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் கனடா சுமார் 200,000 செல்வந்தர்களுக்கு கடனடிய குடியுரிமை வழங்கி வரவழைத்து உள்ளது. அவர்கள் ஆளுக்கு சராசரி C$1 மில்லியனுடன் வந்திருந்தால், அதன் மொத்தம் சுமார் C$200 பில்லியன்.