கோவில் தங்க சுரங்க திறப்பு தொலைவு

Odisha

இந்தியாவின் ஒடிசா மாநிலத்து (Odisha) பூரி (Puri) என்ற நகரில் உள்ள 12ஆம் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜகன்னாத் ஆலய (Jagannath Temple) சொத்துக்களை வைத்திருக்கும் சுரங்க வாசல் கதவின் திறப்பு தொலைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் ஆலய சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி அரசையும், மக்களையும் உலுக்கி உள்ளது.
.
இறுதியாக இந்த கோவிலின் தங்க சுரங்கம் 1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அப்போது இடம்பெற்ற கோவில் திருத்த வேலை செலவுகளுக்கு தேவையான பணத்தை பெறும் நோக்கில் சிறிது தங்கம் இங்கிருந்து எடுத்து விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் திறப்பு உரியவரிடம் வழங்கப்பட்டு இருந்தது.
.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த சுரங்க கட்டுமான தரத்தை மேற்பார்வை செய்ய சில பக்தர்கள், ஐயர்கள், தொல்லியலாளர்கள், அரச அதிகாரிகள் ஆகியோர் சுரங்கம் வரை சென்றுள்ளார்.
.
சுமார் ஒரு மணி நேரத்தின் பின் வெளிவந்த மேற்படி குழு, தாம் சுரங்கத்தின் உள்ளே செல்லவேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை என்றும், கட்டுமானத்தின் தராதர மேற்பார்வையை தாம் இரும்பு கதவுகளின் ஊடாக பார்க்க முடிந்திருந்தது என்றும் வெளியே காத்திருந்தவர்களுக்கு கூறி உள்ளது.
.
ஆனால் தற்போது சுரங்கத்தின் உள்ளே செல்லாததன் உண்மை காரணம் அவர்களிடம் திறப்பு இருந்திருக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஒடிசா மாநில அரசு தற்போது விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
.
அதேவேளை அந்த கோவிலுக்கு உரிய, சுரங்கத்துக்கு வெளியே இருந்த, இன்னோர் 8 இறத்தல் தங்கமும் காணாமல் போயுள்ளது தெரிய வந்துள்ளது.
.
World Gold Council கணிப்பீட்டின்படி நூற்றுக்கணக்கான இந்திய கோவில்களில் சுமார் 8.8 மில்லியன் இறத்தல் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய சந்தை விலைப்படி இவற்றின் பெறுமதி சுமார் $160 பில்லியன் ஆகும்.
.