சவுதி அதிகாரிகள் ஈரானில், விரைவில் தூதரகம்

சவுதி அதிகாரிகள் ஈரானில், விரைவில் தூதரகம்

சவுதி அதிகாரிகள் தற்போது ஈரான் சென்றுள்ளனர். இவர்கள் ஈரானின் தலைநகர் தெகிரானில் மீண்டும் சவுதியின் தூதரகத்தை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரானின் அதிகாரிகள் வரும் சில தினங்களில் சவுதி சென்று ஈரானின் தூதரகத்தை ஆரம்பிப்பர்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா கொண்டிருந்த ஆளுமையை உடைத்து சீனா அண்மையில் சவுதிக்கும், ஈரானுக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கி, அவர்கள் இடையே உறவை மீண்டும் ஆரம்பித்து இருந்தது. சீனாவின் எதிர்பாராத இந்த நடவடிக்கையால் அமெரிக்கா திகைத்தது.

சீனாவின் முயற்சி தோல்வியில் முடியலாம் என்றே அமெரிக்கா கருதியது. ஆனால் சவுதியும், ஈரானும் வேகமாக உறவை புதிப்பிக்கின்றன.

சவுதிக்கு, ஈரானுக்கும் இடையே உறவு மீண்டும் ஆரம்பித்ததால், இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட யேமென் (Yemen) யுத்தமும் திடீரென சமாதானத்தை நோக்கி செல்கிறது. அங்கேயும் சண்டையிடும் தரப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன.

சவுதி ஈரானுடன் கொண்ட உறவை தொடர்ந்து மேலும் பல மத்தியகிழக்கு நாடுகள் ஈரானுடன் உறவை புதிப்பிக்கலாம் என்று கருதப்படுகிறது. அவ்வாறு நிகழ்வது இதுவரை மத்திய கிழக்கை பிரிந்து அமெரிக்காவுக்கு பாதகமாக அமையலாம்.

இதுவரை காலமும் இருந்த அமெரிக்கா மட்டுமே மத்திய கிழக்கு நாடுகளுக்கு பாதுகாப்பை வழங்கலாம் என்ற மாயை தற்போது தணிந்துள்ளது.