சீனாவின் வான் எல்லையை மீறியது அமெரிக்கா

EChinaSea

கடந்த வாரம் சீனா நடைமுறைப்படுத்திய கிழக்கு சீன கடலின் மேலான வான் பாதுகாப்பு எல்லையை அமெரிக்கா மீறியுள்ளது. இன்று செவ்வாய் கிழமை Guam இல் இருந்து புறப்பட்ட இரண்டு அமெரிக்க B52 குண்டுபோடும் விமானங்கள் இந்த சீன வான் பரப்பை உத்தரவின்றி கடந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த பறப்பு சீனாவின் அறிவிப்புக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான Pentagon கூறியுள்ளது. அத்துடன் இப்பகுதி சர்வதேச எல்லைக்கு உட்பட்டது எனவும் தாம் இங்கு தொடர்ந்தும் பறக்கவுள்ளதாகவும் Pentagon கூறியுள்ளது. சீனா தரப்பு இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.

சீனாவின் இந்த அறிவிப்பின் பின் பல ஜப்பான் விமான சேவைகள் தமது பயணப்பாதை அறிவிப்புகளை சீனாவுக்கு தெரிவிக்க தொடங்கியிருந்தன. ஆனால் ஜப்பான் அரசு அதை நிறுத்தும்படி கேட்டிருந்தது. இதே விமான சேவைகள் சீனா மற்றும் Hong Kong போன்ற இடங்களுக்கு பறப்பன. அந்த உரிமைகள் பறிக்கப்படலாம் என அவை எண்ணக்கூடும்.

2001 ஆம் ஆண்டில் சீனாவுக்கு அண்மையில் பறந்த அமெரிக்காவின் விமானம் ஒன்றை சீனாவின் யுத்த விமானம் மோதியது. அமெரிக்கா அது ஒரு விபத்தல்ல, திட்டமிட்ட வேலையே என்றது. இந்த மோதலில் பாரிய சேதமடைந்த அமெரிக்க விமானம் சீனாவின் Hainan தீவில் வேறு வழி எதுவும் இல்லாமையால் உத்தரவின்றி இறங்கவேண்டியதாயிற்று. பின்னர் அந்த பழுதடைந்த விமானம் ரஷ்யாவின் விமானமான Antonov ஒன்றில் எடுத்துச்செல்லப்பட்டது. அந்த விமானத்தின் அனைத்து பாகங்களும் சீனாவின் பரிசோதனைக்கு உள்ளானது. சீனாவின் வான்படையை சார்ந்த Lt. Col . Wang இதில் மரணமானதாக கூறப்பட்டிருந்தது .

அதன் பின் அமெரிக்கா சீனாவின் அருகில் பறப்பதை குறைத்துக்கொண்டது. இவ்வாறு மீண்டும் ‘வான்வெளி மோதல்’ நடந்தால் அமெரிக்காவுக்கு வேறுவழி இன்றி சீனாவின் தரை இறங்க நேரிடும். அது மீண்டும் தலையிடி கொடுக்கும். அதேவேளை சீனாவின் பலம் வளர்வதையும் அமெரிக்கா விரும்பாது.

அது மட்டுமன்றி சீனாவின் உதவி இன்றி வடகொரியா, ஈரான் போன்ற  நாடுகளையும் அமெரிக்கா கட்டுப்படுத்தமுடியாது. இரு சாரார்க்கும் இது ஒரு முக்கிய விடயம்.