சீனாவில் மதிப்பை இழக்கும் மேற்கின் பட்டதாரிகள்

சீனாவில் மதிப்பை இழக்கும் மேற்கின் பட்டதாரிகள்

ஒரு காலத்தில் சீனர் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவது சீனாவில் வேலைவாய்ப்பை பெறும் சந்தர்ப்பத்தை பெருமளவு அதிகரித்து இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது வேகமாக அழிந்து வருகிறது. பதிலுக்கு சீன நிறுவனங்கள் சீன பட்டதாரிகள் மீது நாட்டம் கொள்ள ஆரம்பித்து உள்ளனர்.


2019ம் ஆண்டு 703,500 சீனர் வெளிநாடுகள் சென்று பல்கலைக்கழகங்களில் கற்று உள்ளனர். அதில் சுமார் 100,000 மாணவர் பிரித்தானியா சென்று கற்றுள்ளனர். ஆனாலும் உள்ளூரில் பட்டம் பெற்றோர் சீன நிறுவனங்களின் மதிப்பை பெறுகின்றனர். அதிலும் Tsinghua, Peking, Fudan போன்ற பல்கலைக்கழக பட்டதாரிகள் முன்னணியில் உள்ளனர்.

2020ம் ஆண்டு பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய அமைப்புகள் இணைந்து செய்த உலக அளவிலான  Employability Rankings வரிசையில் சீன பட்டதாரிகள் 5ம் இடத்தில் உள்ளனர். பிரித்தானியா 4ம் இடத்தில் உள்ளது.

1978 முதல் 2019 வரையான காலத்தில் சுமார் 6.5 மில்லியன் சீனர் வெளிநாடுகள் சென்று பல்கலைக்கழகங்களில் கற்று உள்ளனர். அவர்களில் 90% மீண்டும் சீனா திரும்பி உள்ளனர்.

சீன பட்டதாரிகள் மீது நாட்டம் உயர சீன பல்கலைக்கழகங்களின் தரம் உயர்வதே பிரதான காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக Project 985 மற்றும் Project 211 மூலம் சீன அரசு அந்நாட்டின் பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்தி உள்ளது.

1998ம் ஆண்டும் 5ம் மாதம் (அதனாலேயே Project 985 என அழைக்கப்படுகிறது) சீனா நடைமுறை செய்த திட்டப்படி அங்குள்ள 39 பல்கலைக்கழகங்களை சர்வேதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டன.

2006ம் ஆண்டு மேலும் 33 பல்கலைக்கழகங்கள் Project 211 மூலம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டன. 21ம் நூற்றாண்டுக்கு 1 நூறு பல்கலைக்கழகங்கள் என்பதே 211 என்பதன் விளக்கம். 2008ம் ஆண்டில் 116 பல்கலைக்கழகங்கள் Project 211 இல் இணைக்கப்பட்டு இருந்தன.

ஒரு காலத்தில் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் உலகில் பிரசித்தமாக இருந்தன. பின் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பிரித்தானியாவை பின் தள்ளி பிரசித்தம் ஆகின. தற்போது சீன பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களை பின் தள்ளுகின்றன.